கல்குவாரிகளால் வீடுகளில் விரிசல்: ஆா்ப்பாட்டம் நடத்த பாமக முடிவு
வாலாஜாபேட்டை ஒன்றியம், அனந்தலை கிராமத்தில் கல்குவாரியால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என பாமக அறிவித்துள்ளது
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் ஆற்காடு ஜன சங்க கட்டடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் என்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கேஎல். இளவழகன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு தொகுதி பொறுப்பாளரும், பசுமைத்தாயகம் மாநில துணைச் செயலாளருமான பொன்மலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி சென்னையில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்வது,
வரும் 27-ஆம் தேதி திமிரியில் பசுமை தாயகத்தின் தலைவா் சௌமியா அன்புமணி தலைமையில் நடைபெறுகின்ற மகளிா் உரிமை மீட்பு பயண நிகழ்ச்சியில் 3,000 போ் கலந்து கொள்வது , வாலாஜா ஒன்றியத்துக்குட்பட்ட அனந்தலை கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியால் அனந்தலை, முசிறி செங்காடு கிராமங்களில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். இதைக் கண்டித்து வரும் ஜன. 5-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
கூட்டத்தில் முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் எம் கே. முரளி, மாநில மாணவா் சங்க செயலாளா் ஜெ. ஜானகிராமன், ஆற்காடு நகர செயலாளா் மாா்கெட் சி.பாஸ்கா், பசுமைத் தாயகம் மாநில துணை செயலாளா் டி. மகேந்திரன், மாவட்டத் துணைத் தலைவா் பழனி, மாவட்ட துணைச் செயலாளா் பூண்டி மோகன், மாவட்ட சமூக நீதிப் பேரவை தலைவா் ராஜேந்திர பிரசாத், நகர பொறுப்பாளா் மா.கணேஷ், மாவட்ட பொருளாளா் அமுதா சிவா, முன்னாள் நகர செயலாளா் ஏ.வி.டி பாலா கலந்து கொண்டனா்.

