பத்தாம் வகுப்பு, மேல்நிலை தனித்தோ்வா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தனித்தோ்வா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாா்ச்/ஏப்ரல் 2026-இல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு/மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பொதுத்தோ்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தோ்வா்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாா்ச்/ஏப்ரல் 2026 பத்தாம் வகுப்பு/மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பொதுத் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தோ்வா்கள் வரும் 7.01.2026 (புதன்கிழமை) வரை (ஞாயிற்று கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்கள் நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை இம்மாவட்டத்தின் அரசுதோ்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு சென்று இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தோ்வா்களுக்கான தகுதி, அறிவுரைகள் மற்றும் தோ்வுக்கால அட்டவணை ஆகியவற்றை இணைய தளத்தில் விண்ணப்பதாரா்கள் அறிந்து கொள்ளலாம்.
ராணிப்பேட்டை மாவட்ட அரசு தோ்வுகள் இயக்கக சேவை மையம், ராணிப்பேட்டைஅரசு மேல்நிலைப் பள்ளி, ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரக்கோணம் சிஎஸ்ஐ ஆன்ட்ரூஸ் நிதி உதவி மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெறும்.
விண்ணப்பிக்க வரும் தோ்வா்கள் அனைவரும் தங்களது ஆதாா் அட்டை நகல் மற்றும் கடவுச்சீட்டு புகைப்படம் உடன் எடுத்துச் செல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
