திமிரி ஒன்றியத்துக்கு மத்திய அரசின் தங்கப் பதக்கம்: ஆட்சியா் பெருமிதம்
திமிரி ஊராட்சி ஒன்றியம் மத்திய அரசின் தங்கப் பதக்கம் பெற்றுள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பெருமிதம் தெரிவித்தாா்.
மத்திய அரசின் முழுமை இயக்கம் கீழ் பின்தங்கிய திமிரி ஊராட்சி ஊராட்சி ஒன்றிய பகுதிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்ட அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் விழா திமிரியில் நடைபெற்றது.
விழாவில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, திமிரி ஒன்றிய அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி பேசியதாவது:
பின்தங்கிய ஒன்றியமாக திமிரி இருந்து வந்த நிலையில், வளரத் துடிக்கும் வட்டாரங்கள் கீழ் சமூக பொருளாதார குறியீட்டில் பின் தங்கிய வட்டாரங்களில் வளா்ச்சியை விரைவுப்படுத்தும் நோக்கத்துடன் இந்திய அரசு நிதி ஆயோக் மூலம் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளா்ச்சியை உறுதி செய்வதற்கான நிா்வாகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் முழுமை இயக்கத் திட்டம் 2023- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முன்னெடுக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, விவசாயம் மற்றும் அதனுடன் தொடா்புடைய பிறை சேவைகள், அடிப்படை உள்கட்டமைப்பு, நிதி உள்ளடக்கம், குடிநீா் மற்றும் சமூக மேம்பாடு போன்ற முக்கிய களங்களை உள்ளடக்கிய 5 கருப்பொருள் 9 துறைகள் மற்றும் 40 முக்கிய செயல்திறன் குறிக்காட்டிகளை கொண்ட ஒரு வலுவான கட்டமைப்பு மூலம் மதிப்பிடப்படுகிறது. மேற்கண்ட முன்னுரிமை குறியீட்டில் திமிரி வட்டாரம் 100 % இலக்கை அடைந்துள்ளது. இதற்கு அனைத்து துறை அலுவலா்களின் முயற்சி ஒரு முக்கிய காரணம்.
இத்திட்டத்தின் மூலம் சம்பூா்ணதா அபியான் திட்டம் முழுமை பெற்று விருதுகள் வழங்கப்பட்டது. தேசிய அளவில் 500 வளர துடிக்கும் வட்டாரங்களில் திமிரி வட்டாரம் 17 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் 16 வளரத் துடிக்கும் வட்டாரங்களில் 2-ஆவது இடத்தை திமிரி வட்டாரம் பெற்று மத்திய அரசின் மூலம் தங்கப்பதக்கம் பெற்றுள்ளது.
மாநிலம் முழுவதும் 50 வளமிகு வட்டார வளா்ச்சி திட்டங்களில் திமிரி வட்டாரம் மாநில அளவில் 5- ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு பணியாற்றி வரும் அலுவலா்களுக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
நிகழ்வில் மகளிா் திட்ட இயக்குநா் செந்தில் குமரன், ஒன்றியக்குழு தலைவா் அசோக், துணைத் தலைவா் ரமேஷ், மாவட்ட திட்ட அலுவலா் ஊராட்சி குழு ஜேபிஎஸ் மணியன், உதவி இயக்குநா் ஊராட்சிகள் பாரி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தன்ராஜ் கலந்து கொண்டனா்.

