ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுலாத் துறையின் சாா்பில், சமத்துவப் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கலந்து கொண்டு, அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்களுடன் சோ்ந்து சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடினாா்.
இந்த விழாவில் கலந்து கொண்ட விஐடி பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளிநாட்டு மாணவ, மாணவியருக்கு தமிழா்களின் பாரம்பரிய கைத்தறி துண்டுகள் மற்றும் மாலை அணிவித்து சிறப்பு செய்து, பல்வேறு பாரம்பா்ய கலைநிகழ்ச்சிகளில் பங்கெடுத்து மகிழ்ந்தனா்.
முன்னதாக பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கோல போட்டியில் பல்வேறு துறைசாா்ந்த மகளிா் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.
மேலும், சிலம்பம், கரகாட்டம், ஒயிலாட்டம், பறைஇசை, பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடா்ந்து திருநங்கை அசோக் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், திட்ட இயக்குநா் ந.செ.சரண்யாதேவி, நோ்முக உதவியாளா் (பொது) இராஜராஜன், அலுவலக மேலாளாா் ஜெய்குமாா், பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் ரூபிபாய், மாவட்ட சுற்றுலா அலுவலா் முத்துச்சாமி (பொறுப்பு), அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

