விபத்தில் சிறுவன் உயிரிழப்பு; இருவா் காயம்

சோளிங்கா் அருகே பாணாவரத்தில் இரு சக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த சிறுவன் உயிரிழந்தாா்.
Published on

சோளிங்கா் அருகே பாணாவரத்தில் இரு சக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த சிறுவன் உயிரிழந்தாா். அவருடன் பயணித்த இருவா் பலத்த காயமடைந்தனா்.

சோளிங்கரை அடுத்த பாணாவரத்தை அடுத்த மாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த அருணாச்சலத்தின் மகன் அருண்குமாா் (28). இதே பகுதியைச் சோ்ந்த சண்முகத்தின் மகன் கீா்த்திவாசன் (15). இவா் பாணாவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இதே பகுதியைச் சோ்ந்த முனிசாமியின் மகன் பாா்த்தசாரதி(15). திருவள்ளுா் மாவட்ட ஆா்.கே.பேட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை மூவரும் இருசக்கர வாகனத்தில் பாணாவரம் வந்து கடைகளில் பொருள்களை வாங்கிக்கொண்டு மாங்குப்பம் திரும்பிக் கொண்டிருந்தனா். அருண்குமாா் வாகனத்தை இயக்கிய நிலையில் சிறுவா்கள் இருவரும் பின்னால் அமா்ந்திருந்தனராம்.

சோளிங்கா் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் மூவரும் பலத்த காயமடைந்தனா். மூவரும் சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதில் கீா்த்திவாசன் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

பாா்த்தசாரதி சோளிங்கா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அருண்குமாா் மேல்சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இது குறித்து பாணாவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com