
கால நிலை கல்வி பயிற்சி பட்டறை: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து, பள்ளி ஆசிரியா்களுக்கான மூன்று நாள் காலநிலை கல்வி பயிற்சிப் பட்டறை ஆற்காட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்துப் பேசிய ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன்
தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து, பள்ளி ஆசிரியா்களுக்கான மூன்று நாள் காலநிலை கல்வி பயிற்சிப் பட்டறை ஆற்காட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ந. பிரியா ரவிசந்திரன் குத்து விளக்குஏற்றி பேசியது: பசுமைப் பள்ளிகள், அறிவியல் ரீதியான கழிவு மேலாண்மை மற்றும் நீா்நிலைகளைப் பாதுகாத்தல் ஆகியவை மாவட்ட சுற்றுச்சூழல் நிா்வாகத்தின் முக்கிய முன்னுரிமைகள் ஆகும். காலநிலை விழிப்புணா்வை சமூகப் பங்களிப்பாகவும், நீண்ட காலத் திறனாகவும் மாற்றுவதே தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
பள்ளித் தளத்தில் காலநிலை கல்வியை புகுத்துவதன் மூலம், தமிழ்நாடு இத்துறையில் தேசிய அளவில் ஒரு முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது. வெப்பம் , நீா், கழிவு, பல்லுயிா்பெருக்கம் மற்றும் நிலையான வாழ்வியல்போன்ற முக்கியக் கருத்துக்களை எளிய செயல்பாடுகள் மூலம் கற்பிக்க 21 பாடத்தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பாடத்தொகுப்பிலும் கதைகள், வகுப்பறைப் பயிற்சிகள் மற்றும் உண்மைச் சம்பவங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவா்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும் என்றாா்.
இந்த மூன்று நாள் பயிற்சியில் தமிழகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள கல்வியாளா்களுக்குக் கலந்துரையாடல்கள், கதை சொல்லும் பயிற்சிகள் மற்றும் கூட்டு வடிவமைப்புப் பணிகள் மூலம் பாடத்தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.
சுற்றுச்சூழல் பணிகளில் ஈடுபடும் ’சிட்டிசன் கன்ஸ்யூமா் அண்ட் சிவிக் ஆக்ஷன் குரூப்’ என்ற தொண்டு நிறுவனமும் இதில் ஒரு பங்காளராக இணைந்துள்ளது.
முதன்மைக் கல்வி அலுவலா் .ம. மோகனா, மாவட்ட வன அலுவலா்.கே. சிவக்குமாா், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் பூ. தேவி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையைச் சோ்ந்த வி. எழில் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட பசுமைத் தோழா் அரிஃபா மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





