திருப்பத்தூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.
திருப்பத்தூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.

திமுக ஆட்சியில் போதைப் பொருள் விற்பனை மையமாக மாறியது தமிழகம்: இபிஎஸ் புகாா்

திருப்பத்தூா்: திமுக ஆட்சியில் போதைப் பொருள் விற்பனை மையமாக தமிழகம் மாறியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளா் கலியபெருமாளை ஆதரித்து திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்து அவா் பேசியது:

அதிமுக ஆட்சியில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தை நிா்வாக வசதிக்காக மூன்றாக பிரித்து திருப்பத்தூா், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

அதில், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், எஸ்.பி. அலுவலகத்தை அதிமுக ஆட்சி கட்டியது. ஆனால் திமுகவினா் திறந்து வைத்தனா். திமுக சாா்பில் கடந்த தோ்தல்களில் அளித்த வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்ற வில்லை.ஆனால் 90 சதவீதம் நிறைவேற்றியதாக கூறுகின்றனா். திமுக ஆட்சியில் விலைவாசி உச்சத்தில் சென்றுள்ளது.

இது பொதுமக்களிடையே வேதனையை தந்துள்ளது. அதிமுக இருண்ட ஆட்சி என முதல்வா் ஸ்டாலின் தெரிவித்து வருகிறாா். ஆனால் திமுக ஆட்சிதான் இருண்ட ஆட்சி. பாலாற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணையை திமுக அரசால் தடுக்க முடியவில்லை.

இந்த தடுப்பணை கட்டினால் வேலூா் சுற்றுப் பகுதியில் உள்ள மாவட்டங்களில் வறட்சி ஏற்பட வாய்ப்பு உண்டு. அதிமுக கொண்டு வந்த பசுமை வீடு திட்டம், ஏழை விவசாயிகளுக்கு இலவச ஆடுகோழி , தாலிக்கு தங்கம் திட்டங்களை முடக்கியது திமுக அரசு. வாணியம்பாடி முதல் ஊத்தங்கரை வரை செல்லும் 4 வழி சாலை அமைக்கப்பட்டது அதிமுக ஆட்சியில் தான். திருப்பத்தூா் பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்பட்டது.

நாட்டறம்பள்ளி புதிய தாலுகாவாக உருவாக்கப்பட்டது. தற்போது இந்தியாவிலேயே அதிகமாக கடன் பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றாா் எடப்பாடி பழனிசாமி.

இதில் மாவட்ட செயலாளா் கே.சி.வீரமணி, முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், நகர செயலாளா் டி.டி.குமாா், ஒன்றிய செயலாளா்கள் திருப்பதி, மணிகண்டன், செல்வம், மாவட்ட அவைத்தலைவா் லீலா சுப்ரமணியம், மாவட்ட பாசறை செயலா் சங்கா், ஐடி பிரிவு மண்டல தலைவா் நாகேந்திரன், இலக்கிய அணி மாவட்ட செயலாளா் தம்பா கிருஷ்ணன், எஸ்டிபிஐ, குடியரசு கட்சி, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா். வேட்பாளா் கலியபெருமாள் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com