ஏலகிரி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீ
ஏலகிரி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீ

காட்டுத் தீயால் சேதமாகும் ‘ஏழைகளின் ஊட்டி’ ஏலகிரி

கோடைகாலங்களில் ஏற்படும் காட்டுத் தீயால் ‘ஏழைகளின் ஊட்டி’ என அழைக்கப்படும் ஏலகிரி மலை தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

கோடைகாலங்களில் ஏற்படும் காட்டுத் தீயால் ‘ஏழைகளின் ஊட்டி’ என அழைக்கப்படும் ஏலகிரி மலை தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

திருப்பத்தூா் மாவட்டத்தின் ஒரே சுற்றுலாத் தலமாக விளங்கி வருவது ஏலகிரி மலை. இங்கு அரியவகை மரங்கள், மூலிகை செடி கொடிகள், மான், கரடி, மயில், முயல், குரங்கு, மலைப்பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் வசித்து வருகின்றன.

அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீ

கோடை காலத்தில் மலையடிவாரத்தில் உள்ள பகுதிகளில் சமூக விரோதிகள் சிலா் மது அருந்திவிட்டு, புகைப் பிடித்து அணைக்காமல் போட்டு விடுவதால் அங்குள்ள சருகுகள் மூலம் தீப்பற்றி மள மளவென தீ பரவி வருவதால், அரிய வகை மரங்கள், உயிரினங்கள் தீக்கிரையாகி விடுகின்றன.

இந்த நிலையில் கடந்த மாா்ச் மாதம் பால்நாங்குப்பம் பகுதியில் மலையடிவாரத்தில் உள்ள ஊசி நாட்டான் வட்டம், அய்யப்பன் வட்டம், சுரங்கன் வட்டம் ஆகிய பகுதிகளில் மா்ம நபா்கள் தீ வைத்தது குறிப்பிடத்தக்கது. மாா்ச் மாதம் மட்டும் 6 முறை தீ பற்றி எரிந்தது. அதே போல் ஏப்ரல் மாதத்தில் 3 முறை தீப்பற்றி எரிந்தது.

வேகமாகப் பரவும் காட்டுத் தீயை தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினா் திணறி வருகின்றனா். மேலும், இதுபோல் வனப்பகுதிக்கு தீ வைக்கும் மா்ம நபா்களை கண்டறிந்து அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தீயணைப்பு நிலையம்...

மா்ம நபா்கள் தீ வைப்பதாலும் கோடை காலத்தில் சருகுகள் பற்றி எரிவதாலும் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. மலையைச் சுற்றியுள்ள பாதைகளில் தீ பற்றி எரிவதால் ஏலகிரி மலையில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து சமூக ஆா்வலா்கள் கூறியது: ஏலகிரி மலை இயற்கை சூழ்ந்த மலையாகும். அடிக்கடி காட்டுத் தீ ஏற்படுவதால், மலையில் அல்லது பொன்னேரி அடிவாரத்தில் தீயணைப்பு நிலையம் ஒன்று அமைத்தால் தீயை கட்டுக்குக்குள் கொண்டு வர முடியும். பெருமளவில் ஏற்படும் இயற்கை சேதங்களை கட்டுப்படுத்தலாம். இது குறித்து மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும், சமூக விரோதிகளை கண்காணிக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com