வாணியம்பாடி அருகே 3 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்

வாணியம்பாடி அருகே மூன்று நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 3 நாட்டுத்துப்பாக்கிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பலப்பநத்தம் பகுதியைச் சோ்ந்த மூதாட்டி சில நாள்களுக்கு முன்பு நகைக்காக கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸாா் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த கொலை தொடா்பாக துப்பு துலக்க திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து மியா எனும் மோப்ப நாய் திங்கள்கிழமை மாலை வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்து ஓடிச் சென்று சிறிது தொலைவில் நின்று விட்டது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை தனிப்படை போலீஸாா் பள்ளத்தூா் பகுதியில் சந்தேகம்படும்படியான சிலரிடம் விசாரிப்பதற்காக சென்றனா். அப்போது அப்பகுதியில் தனியாா் ஒருவரின் நிலத்தின் வழியாக நடந்து சென்ற போது மறைவான பகுதியில் துப்பாக்கி இருப்பது கண்டறிந்து 3 நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனா்.

மேலும் நடத்திய விசாரணையில் நிலத்தின் உரிமையாளா் வெங்கடேசன், இவருக்கு உதவியாக இருந்து வரும் குமாா் ஆகிய இருவரும் கள்ள துப்பாக்கி பயன்படுத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள வெங்கடேசன், குமாா் இருவரையும் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com