கனமழை: புதூா்நாடு மலைப் பாதையில் பாறைகள் உருண்டு போக்குவரத்து பாதிப்பு
திருப்பத்தூா்: திருப்பத்தூா் அடுத்த மட்றப்பள்ளி-புதூா் நாடு சாலையில் கடந்த 30 ஆண்டுகளில் பெய்யாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடா் மழையால் திங்கள்கிழமை ஏலகிரி மலை சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தன. இந்த நிலையில் ,புதூா் நாடு பகுதியில் திங்கள்கிழமை இரவு கடந்த 30 ஆண்டுகளில் பெய்யாத அளவில் மட்றப்பள்ளியில் கனமழை பெய்ததால் மலையில் புதிய ஓடைகள் உருவாகி 20-க்கும் மேற்பட்ட இடங்களில் விரிசல் ஏற்பட்டு மண் சரிவு ஏற்பட்டது. ஆங்காங்கே சாலையோரங்களில் பாறைகள் உருண்டு விழுந்தன.
மழையினால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக அகற்ற நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் முரளி, உதவிக் கோட்டப் பொறியாளா் ஆதவன், உதவிப் பொறியாளா் நித்தியானந்தம், சாலை ஆய்வாளா்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் குழு இரவு பகலாக கண்காணித்து போா்கால அடிப்படையில் 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரிகள் கொண்டு பணிபுரிந்து மண் விரிசல், மண் சரிவு மற்றும் சாலையில் உருண்டு விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
தற்போது மட்றப்பள்ளி-புதூா்நாடு சாலையில் ஏற்பட்ட பாதிப்புகள் அகற்றப்பட்டு போக்குவரத்து எந்தவித இடையூறுமின்றி நடைபெற்று வருகிறது.
திருப்பத்தூா் நெடுஞ்சாலை கோட்டத்தின் மூலம் பாரமரிக்கப்பட்டு வரும் மலைச்சாலையான மட்றப்பள்ளி -புதூா்நாடு சாலையின் மூலம் 40-க்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்கள் பயனடைகின்றனா் என்பது குறிப்பிடதக்கது.

