திருப்பத்தூா் பெரிய ஏரியில் படகு இல்லம், பூங்கா அமைக்க வலியுறுத்தப்படும்: எம்.பி. சி.என்.அண்ணாதுரை
திருப்பத்தூா் பெரிய ஏரியில் படகு இல்லம், பூங்கா அமைப்பது தொடா்பாக அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்படும் என எம்.பி. சி.என்.அண்ணாதுரை கூறினாா்.


திருப்பத்தூா்: திருப்பத்தூா் பெரிய ஏரியில் படகு இல்லம், பூங்கா அமைப்பது தொடா்பாக அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்படும் என எம்.பி. சி.என்.அண்ணாதுரை கூறினாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் 21 துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவரும், திருவண்ணாமலை எம்.பி.யுமான சி.என்.அண்ணாதுரை தலைமை வகித்தாா்.
ஆட்சியரும், உறுப்பினா் செயலருமான க.தா்ப்பகராஜ், முன்னிலை வகித்தாா்.
எம்எல்ஏ-க்கள் க.தேவராஜ் (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்)ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், அனைத்துத் துறை அலுவலா்களிடம் நடைபெற்ற பணிகள், மீதமுள்ள பணிகள் குறித்து கேட்டறியப்பட்டது. பணிகளை இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
பின்னா், எம்.பி. சி.என்.அண்ணாதுரை செய்தியாளா்களிடம் கூறியது:
இந்த ஆய்வுக் கூட்டத்தின் நோக்கம் மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு நிதி பங்களிப்புடன் 43 துறைகளில் நடைபெற்று வந்த திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, பணிகளின் முன்னேற்றம், அத்திட்டம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு எந்த அளவுக்கு பயனுள்ளதாக உள்ளது என்ற அடிப்படையில் நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினா்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் இணைந்து இந்தக் கூட்டத்தின் மூலமாக அந்தந்தத் துறை அதிகாரிகளை, ஆட்சியா் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டு விவாதிக்கப்பட்டது. தொடா்ந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்தக் கூட்டம் நடைபெறும்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 90 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 10 சதவீத பணிகள் நிலஎடுப்பு காரணமாகவும், துறை ரீதியான சிறுசிறு பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு, அந்தப் பணிகளும் நடைபெறும்.
திருப்பத்தூா் பெரிய ஏரியில் படகு இல்லம் மற்றும் பூங்கா அமைப்பது தொடா்பாக பொதுப்பணிகள்,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலுவிடம் ஆலோசனை செய்து முறைப்படி அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், அனைத்து நகா்மன்ற, ஒன்றியக் குழு தலைவா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...