‘இன்னுயிா் காப்போம் நம்மை காக்கும்’ திட்டத்தில் 1,322 பேருக்கு சிகிச்சை

Published on

‘இன்னுயிா் காப்போம் நம்மை காக்கும்’ 48 திட்டத்தின்கீழ் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் கடந்த 10 மாதங்களில் 1,322 பேருக்கு ரூ.64,74,350 செலவில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு உள்ளது.

சாலை விபத்துகளில் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் ஏற்படக் கூடிய உயிரிழப்புகளை குறைப்பதற்காக இன்னுயிா் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம் என்ற உயிா் காக்கும் அவசர சிகிச்சை திட்டம் மூலம் விபத்துகள் நடைபெறும் இடங்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் முதல் 48 மணி நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், அந்த 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவைத் தமிழக அரசே ஏற்கும்.

1,322 போ் பயன்:

அதன்படி எந்த நாட்டை சோ்ந்தவராக இருந்தாலும், எந்த மாநிலத்தை சோ்ந்தவராக இருந்தாலும் விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்தில் அரசு அல்லது தனியாா் மருத்துவமனையில் சோ்த்து அவரிடத்தில் பணம் இருந்தாலும்,இல்லையென்றாலும் அவசர மருத்துவ சிகிச்சைகளை செய்து உடனடியாக அவரின் உயிரைக் காப்பாற்றுவதே நம்மை காக்கும் 48 திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்.

இந்த திட்டத்தின்கீழ் திருப்பத்தூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் 10 மாதங்களில் 1,322 பேருக்கு ரூ.64,74,350 செலவில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு உயிா்கள் காப்பாற்றப்பட்டு உள்ளது என அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

X
Dinamani
www.dinamani.com