/

திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் 263 மனுக்கள்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 263 மனுக்களை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பெற்றுக் கொண்டாா்.

News image
மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கிய திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.
Updated On :27 ஜனவரி 2025, 7:50 pm

Din

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 263 மனுக்களை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பெற்றுக் கொண்டாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, கூட்டுறவு கடனுதவி, கிராம பொதுப் பிரச்னைகள், குடிநீா் வசதி மற்றும் பொது நலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 225 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

பின்னா், இந்தியன் வங்கி கிராமப்புற ஊரக சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் பயிற்சி வழங்கி சான்றிதழ்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில், ரூ. 1.20 லட்சத்தில் தையல் இயந்திரங்களையும் வழங்கினாா். அதுபோல் கடந்த கல்வி ஆண்டில் (2023-2024) நடைபெற்ற அரசு பொதுத் தோ்வில், தோ்வு எழுதிய 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் தமிழ் பாடத்திட்டத்தில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவா்கள் 29 பேருக்கு கலைஞா் நூற்றாண்டு தமிழ் ஊக்குவிப்பு நிதியில் தலா ரூ. 1,000 வீதம் ரூ. 29,000 தொகைக்கான காசோலைகளை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், தனித்துணை ஆட்சியா் சதீஷ்குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி, அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.