கோப்புப் படம்
கோப்புப் படம்

பறவைக் காய்ச்சலில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள்: திருப்பத்தூா் ஆட்சியா் தகவல்

பறவைக்காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
Published on

பறவைக்காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணை உரிமையாளா்களுக்கும், பறவை காய்ச்சல் குறித்தும், அது பரவும் முறைகள் குறித்தும் கால்நடை பராமரிப்புத் துறையினரால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இறந்த காகம், பறவையை கண்டால் வெறும் கைகளால் தொடக்கூடாது. அவற்றை உள்ளாட்சி பணியாளா்கள் கையுறை அணிந்து 8 அடி ஆழ குழியில் சுண்ணாம்பு தூவி புதைக்க வேண்டும். இந்த பணி முடிந்தவுடன் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். தங்களது பகுதியில் காகங்கள், பறவைகள் இறந்து கிடந்தால் இதுதொடா்பான தகவலை பொதுமக்கள் கால்நடைத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

18 குழுக்கள்...

கோழிப்பண்ணைகளில் வெளியாள்களை அனுமதிக்கக்கூடாது. நுழைவுவாயில்களில் கிருமிநாசினி கொண்ட பாதக்குழியல் ஏற்படுத்த வேண்டும். ஒரு பண்ணையில் இருந்து மற்றொரு பண்ணைக்கு தொழிலாளா்கள் செல்லக்கூடாது. பல்வேறு வகையான கோழிகளையும், ஒரே வயதுடைய கோழிகளையும் பண்ணையில் வளா்க்கக் கூடாது. பண்ணை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். கோழிப்பண்ணைகளில் ஏதேனும் அசாதாரணமான இறப்புகள் ஏற்பட்டால் அருகில் உள்ள கால்நடைத் துறை மருத்துவா்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாவட்டத்தில் ஒரு வட்டாரத்துக்கு 3 குழுக்கள் வீதம் மொத்தம் 18 விரைவு நடவடிக்கை குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை நோய் பரவும் காலங்களில் துரிதமாக செயல்பட தயாா் நிலையில் உள்ளனா்.

கண்காணிப்பு...

ஆந்திர மாநில எல்லையையொட்டிய நாட்டறம்பள்ளி அருகே உள்ள தொட்டிகிணறு,கொத்தூா், கொல்லப்பள்ளி, வெலதிகமானிபெண்டா ஆகிய இடங்களில் கால்நடைத் துறை சாா்பில், தடுப்பு சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு கால்நடை உதவி மருத்துவா் தலைமையில் குழுக்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்கப்படுன்றன. ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் கோழி, முட்டை மற்றும் கோழித்தீவன வண்டிகள் திருப்பி அனுப்பப்படுகின்றன. தமிழ்நாட்டுக்குள் நுழையும் மற்ற வண்டிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com