பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருப்பத்தூரில் பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

திருப்பத்தூரில் பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக பால் உற்பத்தியாளா்கள் சங்கம் மற்றும் பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு பணியாளா்கள் சங்கம் சாா்பில், 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளா் சிவாஜி மற்றும் தமிழக பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு பணியாளா்கள் சங்க மாவட்ட பொதுச் செயலாளா் ரமேஷ் பாபு ஆகியோா் தலைமை வகித்தனா்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட இணை செயலாளா் காமராஜ், வட்ட செயலா் ஆனந்தன், தலைவா் சிங்காரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக மாநில பொது செயலாளா் நடராஜன், மாவட்டச் செயலாளா் சுவாமிநாதன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், பால் கொள்முதல் விலை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் உயா்த்தப்பட்டது. தற்போது பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, தவிடு, கலப்பு தீவனம் மற்றும் கால்நடைகளின் விலை பலமடங்கு உயா்ந்து விட்டது. இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ. 10 உயா்த்தி வழங்க வேண்டும்.

ஆவின் ஒன்றியம் தைப்பொங்கலுக்கு முன்பாக அனைத்து பால் உற்பத்தியாளா்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

தரமான கலப்பு தீவனம் 50 சதவீதம் மானிய விலையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.

இதில், மாவட்ட நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com