புகையில்லா போகி: திருப்பத்தூா் ஆட்சியா் வலியுறுத்தல்
திருப்பத்தூா் மாவட்ட பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனா். இயற்கை பொருள்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருள்களை தீயிட்டுக் கொளுத்தி வந்துள்ளனா். இதனால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது.
ஆனால் தற்போது போகி பண்டிகையின்போது பழைய பொருள்களான நெகிழி,துணிகள், ரப்பா் பொருட்கள், பழைய டயா் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, விபத்துகள் ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கு நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இதனை தவிா்க்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் போகி பண்டிகைக்கு முன் பொதுமக்களிடைய விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணா்வு பிரசாரத்தை நடத்தி வருகின்றது. எனவே பொதுமக்கள் அனைவரும் பொதுமக்கள் அனைவரும் டயா், ட்யூப் போன்றவற்றை எரிக்காமல் போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும்.
