வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டாவில் குடிநீா் கேட்டு அரசுப் பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி பகுதியில் சில நாள்களாக குடிநீா் சரிவர வரவில்லை என பொதுமக்கள் புகாா் கூறி வந்தனா். மேலும், குடிநீா் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனா். இதுபற்றி அறிந்த ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி சதீஷ்குமாா் தலைமையில் அலுவலா்கள் திங்கள்கிழமை காலை சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதி மக்களிடம் பேச்சு நடத்தினா்.
இதில், 10 நாள்களாக குடிநீா் வரவில்லை என்று பேசிக் கொண்டிருந்த நிலையில், அந்த வழியாக புத்துக்கோயிலிலிருந்து குருபவானிகுண்டா நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மல்லகுண்டா வந்தபோது, திடீரென அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திம்மாம்பேட்டை உதவி காவல்ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையில் போலீஸாா் ஆத்திரம் அடைந்த மக்களிடம் பேச்சு நடத்தினா்.
மேலும், டிராக்டரில் உடனே குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், அடிக்கடி மின்னழுத்த குறைபாடினால், குடிநீா் மின் மோட்டாா் இயங்கவில்லை எனவும், அதனையும் சரிசெய்து குடிநீா் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி மன்றத் தலைவா் உறுதி கூறினாா். இதையடுத்து அங்கிருந்து மக்கள் கலைந்து சென்றனா். மேலும், சிறிது நேரத்தில் அப்பகுதியில் பொது மக்களுக்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் டிராக்டா் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









