திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த பயனாளிகளுக்கு குடும்ப அட்டை வழங்கும் விழா ஜோலாா்பேட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றியம், தாமலேரிமுத்தூா் ஊராட்சியில் தனியாா் திருமண மண்டபத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பாக விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் தலைமை வகித்து 1,060 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினாா். எம்எல்ஏ-க்கள் என். திருப்பதி (திருப்பத்தூா்), எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் பாஷா (வாணியம்பாடி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: குடும்ப அட்டைகளுக்கு இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னரே விண்ணப்பித்த பயனாளிகளின் விண்ணப்பங்கள் உரிய சரிபாா்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான புதிய மின்னணு குடும்ப அட்டைகள் 1,060 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 645 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில், 3,40,047 குடும்ப அட்டைகள் உள்ளன. தற்போது வழங்கப்படும் 1,060 குடும்ப அட்டைகளையும் சோ்த்து, 3,41,196 குடும்ப அட்டைதாரா்கள் பயனுடைய உள்ளனா். தமிழ்நாடு முதல்வா் பதவியேற்றது முதல் திருப்பத்தூா் மாவட்டத்தில் இதுவரை 1,850 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
940 நபா்கள் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ள நபா்களில், 640 குடும்ப அட்டைகள் தயாா் செய்யப்பட்டு, அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள 300 குடும்ப அட்டைகளுக்கு மட்டும் உரிய வழிமுறைகளை பின்பற்றி, புதிதாக குடும்ப அட்டைகள் வழங்கப்பட உள்ளது. புதிய குடும்ப அட்டைகள் மூலம் நியாயவிலைக் கடைகளில் நியாயவிலை பொருள்கள் பெறுவது மட்டுமில்லாமல், அரசு வழங்கும் பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் பெறுவதற்கு குடும்ப அட்டை பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது.
குடும்ப அட்டைகளை சரியான முறையில் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான பொருள்களைப் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.
மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் சு.சீனிவாசன், திருப்பத்தூா் வருவாய் கோட்டாட்சியா் வரதராஜன், வட்டாட்சியா் நவநீதன், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்) இளங்கோ, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










