புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல் உள்பட 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றவும், நிர்வாகிகளை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தவும் வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பொன்னேரி பகுதிகளில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் தலைமை வகித்துப் பேசியது:
புதிய ஜி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித முரண்பாடுகளைக் களைய வேண்டும்; சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி மற்றும் கிராம ஊர்ப்புற நூலகர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்குதல்; 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்பட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏற்கெனவே தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தோம். ஆனால், இதுவரை கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் சங்க நிர்வாகிகளை அழைத்து, அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம் என்றார் அவர்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செளத்ரி, ஞானசேகரன், பாண்டுரங்கன் வட்டார நிர்வாகிகள் கதிரவன், இளங்கோவன், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.
திருத்தணியில்...
திருத்தணி கமலா திரையரங்கம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, திருவள்ளூர் மாவட்ட அரசு ஊழியர் சங்கச் செயலர் காந்திமதிநாதன் தலைமை வகித்தார்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் தலைவர் பூங்கோதை, சத்துணவு ஊழியர் மாநில செயற்குழு உறுப்பினர் மணிகண்டன், மாவட்டப் பொருளாளர் டில்லி பாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய்த் துறை வட்ட கிளை தலைவர் டில்லிபாபு வரவேற்றார். இதில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஜாக்டோ-ஜியோ வட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வி.ஓசிராமன் தலைமை வகித்தார். மாவட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர் சு.கதிரவன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள் அவதி...: வேலைநிறுத்தப் போராட்டத்தின் எதிரொலியாக திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு ஆகிய ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் சில ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் சில நடுநிலைப் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஒரு சில தற்காலிக ஆசிரியர்கள் மூலம் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை செயல்பட்டன. மேலும், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பேரூராட்சி அலுவலக ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
பொன்னேரியில்...
பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பொன்னேரி வட்டத்தில் உள்ள மீஞ்சூர், சோழவரம் ஒன்றியங்களில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மாதவரத்தில்...
மாதவரம் நகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினர் ரமேஷ் தலைமை வகித்தார்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினர் கீதா, வட்ட ஒருங்கிணைப்பாளர் மயில்வேலன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில், மாவட்டச் செயலர் ஆர்.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுக சார்பில், சென்னை வடக்கு மாவட்டச் செயலரும், மாதவரம் சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.சுதர்சனம் ஆதரவு தெரிவித்தார்.
கும்மிடிப்பூண்டியில்...
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், நெடுஞ்சாலை துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.
மேலும் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒருங்கிணைப்பாளர்கள் சிவக்குமார், பி.பி.முரளி, சேகர், வள்ளிமுத்து, ஜெயகுருநாதன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்.
ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









