தனியார் செவிலியர் கல்லூரி தாளாளர் மீது பாலியல் புகார் கூறி 200க்கும் மேற்பட்ட மாணவிகள் திண்டுக்கல் பழனிச் சாலையில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் பி.ஜோதிமுருகன். இவர், திண்டுக்கல் பழனிச் சாலையிலுள்ள முத்தனம்பட்டி பகுதியில் செவிலியர் கல்லூரி மற்றும் கேட்ரிங்க கல்லூரி நடத்தி வருகிறார். அந்த கல்லூரியில் திண்டுக்கல் மட்டுமின்றி, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி தாளாளரான ஜோதிமுருகன், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக கூறி 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெள்ளிக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முத்தனம்பட்டி அழகுப்பட்டி சாலையில் முதல் கட்டமாக மறியலைத் தொடங்கிய மாணவிகள், பின்னர் திண்டுக்கல் பழனி பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
விடுதி காப்பாளர் கைது: மாணவிகள் தரப்பில் 1098க்கு பாலியல் பிரச்னை குறித்து வெள்ளிக்கிழமை காலை 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் சென்ற நிலையில் திடீரென மறியல் போராட்டம் தொடங்கியது. தகவல் அறிந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.சீனிவாசன், காவல் உதவி கண்காணிப்பாளர் அருண் கபிலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்லூரி தாளாளரான ஜோதிமுருகன் தலைமறைவானதை அடுத்து, விடுதி காப்பாளர் அர்ச்சணா என்பவரை தாடிக்கொம்பு போலீசார் கைது செய்தனர். மேலும், ஜோதிமுருகனின் தந்தை பழனிச்சாமி உள்ளிட்ட அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.