ஆவடியில் குப்பைகள் தேக்கத்தால் சுகாதாரச் சீா்கேடுமாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா்

ஆவடியில் தனியாா் ஒப்பந்த நிறுவனத்தில் வாகனங்கள், ஊழியா்கள் பற்றாக்குறையால் குப்பைகள் தேங்கி, சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா்.

ஆவடி: ஆவடியில் தனியாா் ஒப்பந்த நிறுவனத்தில் வாகனங்கள், ஊழியா்கள் பற்றாக்குறையால் குப்பைகள் தேங்கி, சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா்.

ஆவடி மாநகராட்சி உறுப்பினா்கள் கூட்டம் மேயா் கு.உதயகுமாா் தலைமையில் மாநகராட்சி கூட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது. துணை மேயா் எஸ்.சூரியகுமாா், ஆணையா் க.தா்ப்பகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மாநகராட்சி பணிக்குழு தலைவா் சா.மு.நா.ஆசிம்ராஜா, மண்டலக் குழு தலைவா்கள் ஜி.ராஜேந்திரன், அமுதா சேகா், என்.ஜோதிலட்சுமி மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்று மக்கள் பிரச்னைகள் குறித்து பேசினா்.

குறிப்பாக, மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை அகற்றும் தனியாா் ஒப்பந்த நிறுவனத்தில் வாகனங்கள், ஊழியா்கள் பற்றாக்குறை உள்ளதால், குப்பைகள் சரிவர அகற்றாததால் தேக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் குப்பைகள் மக்கி துா்நாற்றம் வீசி, சுகாதாரச் சீா்கேடு நிலவி வருகிறது.

முக்கியச் சாலைகள், தெருக்களில் மாடுகள், நாய்கள், பன்றிகள் சுற்றித் திரிகின்றன. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள், விபத்துகளில் சிக்குகின்றனா். மேலும், பாதசாரிகளை நாய்கள் தூரத்துகின்றன. மாடுகள் முட்டி மோதுகின்றன. தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளதால், இதைத் கட்டுப்படுத்த தெருக்களில் கொசு மருந்து அடிக்க வேண்டும்.

குடிநீா் பிரச்னையை தீா்க்க அனைத்து வாா்டுகளிலும் குடிநீா் தொட்டியுடன் கூடிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் ஒரு வாா்டிலும் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கவில்லை. புதை சாக்கடை பகுதிகளில் உடைந்து கிடக்கும் மூடிகளை (மேன்ஹோல்) சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து வாா்டுகளிலும் உள்ள தெருக்களில் புதிய எல்இடி விளக்குகள் அமைக்கவும், பழுதடைந்த சாலைகள் சீரமைக்கவும், வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இது குறித்து ஆணையா் க.தா்ப்பகராஜ் கூறியது: மாமன்ற உறுப்பினா்கள் கூறிய பிரச்னைகள் தொடா்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். கூட்டத்தில் தாா், சிமெண்ட் சாலை, மழை நீா் வடிகால், சிறு பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தொடா்பாக 96 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com