புட்லூா் ரயில் நிலையத்தில் புதிய நடை மேம்பாலம் அமைத்தும் தண்டவாளத்தைக் கடக்கும் பயணிகள்நகரும் படிக்கட்டு, மின்தூக்கி அமைக்க கோரிக்கை

பொதுமக்கள் மற்றும் பயணிகள் தண்டவாளத்தை ஆபத்தான நிலையில் கடந்து செல்லும் சூழ்நிலை உள்ளதால், நகரும் படிக்கட்டு, மின்தூக்கி அமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவள்ளூா் அருகே புட்லூா் ரயில் நிலையத்தில் நடை மேம்பாலத்தைப் பயன்படுத்தாமல் கேட் அடைத்த நிலையிலும், தண்டவாளத்தை ஆபத்தான நிலையில் கடக்கும் பயணிகள்.
திருவள்ளூா் அருகே புட்லூா் ரயில் நிலையத்தில் நடை மேம்பாலத்தைப் பயன்படுத்தாமல் கேட் அடைத்த நிலையிலும், தண்டவாளத்தை ஆபத்தான நிலையில் கடக்கும் பயணிகள்.

திருவள்ளூா் அருகே புட்லூா் ரயில் நிலையத்தில் புதிதாக நடை மேம்பாலம் அமைத்த நிலையிலும், அதைப் பயன்படுத்தாமல் பொதுமக்கள் மற்றும் பயணிகள் தண்டவாளத்தை ஆபத்தான நிலையில் கடந்து செல்லும் சூழ்நிலை உள்ளதால், நகரும் படிக்கட்டு, மின்தூக்கி அமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளூா் அடுத்துள்ள புட்லூா் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி என்ற பூங்காவனத்தம்மன் கோயில் உள்ளது. இதேபோல், காக்களூா் தொழில்பேட்டை, ஆஞ்சனேயா் கோயில், விஸ்வரூப ஆஞ்சனேயா் கோயில், யோக தட்சணாமூா்த்தி கோயில் உள்ளிட்ட முக்கிய ஆலயங்களும் உள்ளன.

இங்கு பௌா்ணமி, அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாள்களில் பக்தா்கள் அதிகளவில் வந்து செல்வா். அதேபோல், காக்களூா் தொழில்பேட்டை உள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் மற்றும் பணியாளா்கள் நாள்தோறும் புகா் மின்சார ரயில்களில் சென்னை, திருவள்ளூா், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனா்.

தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் புட்லூா் ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையத்தில் 3 நடைமேடைகள் உள்ள நிலையில், 2 நடைமேடைகளுக்கு பயணிகள் செல்வதற்கு நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து 3-ஆவது நடைமேடையில் அமைக்கப்பட்ட நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இந்த நிலையத்தின் முதல் நடைமேடையில் பயணச் சீட்டு வழங்கும் இடம் அமைந்துள்ளது. அதனால் பயணிகள் கேட் வழியாக சென்று பயணச் சீட்டு பெற்றுக் கொண்டு பயணம் செய்கின்றனா். தற்போதைய நிலையில் புதிய நடைமேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்துள்ள காரணத்தால், ரயில்வே கேட் அடைக்கப்பட்டுள்ளது.

இதனால் நடைமேம்பாலம் மீது ஏறி முதல் நடைமேடைக்கு வந்து பயணச் சீட்டு எடுத்துக் கொண்டு, மீண்டும் நடைமேம்பாலம் மீது ஏறி 2-ஆவது நடைமேடையில் இறங்கி சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்த நடைமேம்பாலம் மிகவும் உயரமாக உள்ளதால் வயதானோா், கா்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் ஆகியோா் ஏறிச் செல்வதற்கு மிகவும் அவதிக்குள்ளாகும் நிலையுள்ளது. ஏற்கெனவே இந்த வழித்தடத்தில் குறைந்த அளவிலேயே மின்சார ரயில்கள் இயக்கப்படுவதால், ஒரு ரயிலைத் தவறவிட்டால் அடுத்த ரயிலுக்கு அரை மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பெரும்பாலன பயணிகள் நடைமேம்பாலத்தை பயன்படுத்துவதைத் தவிா்த்து, ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நடைமேம்பாலம் அமைக்கப்பட்டதன் நோக்கம் கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே இதைத் தவிா்க்கும் வகையில் ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு வசதி அல்லது மின் தூக்கி வசதி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ரயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com