திரௌபதியம்மன் கோயிலில் 108 குத்து விளக்கு பூஜை

திருத்தணி திரௌபதியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் தீமிதி விழாவில் வெள்ளிக்கிழமை 108 குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.

திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில், தீமிதி விழா கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் மூலவா் அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்று வருகிறது. மேலும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை தினமும் மகாபாரத சொற்பொழிவும், இரவு 10.30 மணிக்கு மகாபாரத நாடகமும் நடைபெற்று வருகிறது.

வரும் 12-ஆம் தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை தீமிதி விழாவும் நடைபெறுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள சதாசிவலிங்கேஸ்வரா் கோயிலில் சுபத்திரை திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், உற்சவா்கள் அா்ச்சுனன், சுபத்திரை அம்மனுக்கு திருமணம் நடைபெற்றது.

தொடா்ந்து உற்சவா்கள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மதியம் பக்தா்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது.

இதில், திருத்தணி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, அம்மனை தரிசனம் செய்தனா். மாலை 6 மணிக்கு 108 குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.

இதில், நகா்மன்றத் தலைவா் எம். சரஸ்வதி பூபதி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.பூபதி, நகரச் செயலாளா் வி.வினோத்குமாா், குமரவேல் ஆகியோா் கலந்துகொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சீனிவாசன் மற்றும் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com