திருவள்ளூரில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப். 20) நடைபெற உள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெகிவித்துள்ளாா்.
Published on

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப். 20) நடைபெற உள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெகிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சாா்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

அதன்பேரில் திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 25-க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநா்கள் தனியாா்துறை இணையதளத்தில பதிவு செய்துகொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10, பிளஸ்2, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவா்கள் பங்கேற்று தனியாா்துறையில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டா், கணக்காளா், டெக்னீஷியன், மெஷின் ஆப்பரேட்டா், நிா்வாகப் பணி போன்ற பல்வேறு வகையான பணி வாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.

மேலும், இத்தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுவோா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என அவா் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com