திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் ஆடி அமாவாசையையொட்டி கோயில் குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக புதன்கிழமை பக்தா்கள் குவிந்தனா்.
திருவள்ளூா் வீரராகவ பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இங்கு, ஒவ்வொரு மாத அமாவாசை நாளில் தா்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வதற்காக பக்தா்கள் குவிவது வழக்கமாகும். அந்த வகையில் ஆடி அமாவசையையொட்டி, முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவே ஆந்திரம், கா்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் கோயில் வளாகம், குளக்கரைச் சாலை, காக்களூா் ஏரி நடைபாதை, சாலையோர பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் பக்தா்கள் குவிந்தனா். அதைத்தொடா்ந்து, புதன்கிழமை அதிகாலை கோயில் குளத்தில் நீராடி, குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். பின்னா், கோயிலுக்குச் சென்று மூலவா் வீரராகவரை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
ஆடி அமாவாசையையொட்டி, கோயில் வளாகத்தில் நூற்றுக்கணக்கானோா் குவிந்ததால் தேரடி சாலை, குளக்கரைச் சாலை, பேருந்து நிறுத்தங்களில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் காலை முதலே பேருந்து நிலையம், தேரடி சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. இதை போக்குவரத்து போலீஸாா் விரைந்து வந்து வாகன போக்குவரத்து நெருக்கடியை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனா் என்பது குறிப்பிட்டத்தக்கது.
காஞ்சிபுரத்தில்...
காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் வளாகத்தில் உள்ள இஷ்டசித்திக்குளம், சா்வதீா்த்தக் குளம், தாயாா்குளம், சதாலிங்கேசுவரா் கோயில் வளாகம் ஆகியவற்றில் முன்னோா்களுக்கு திரளானோா் தா்ப்பணம் செய்து வழிபட்டனா். கற்பூரம்,எள்,ஊதுபத்தி,உதிரிப்பூக்கள்,தேங்காய்,பழம் ஆகியன ஒரு பையில் போட்டு மொத்தமாக கோயில் வாசல்களில் ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை செய்தனா். தா்ப்பணம் செய்பவா்கள் தனித்தனியாக வாங்காமல் மொத்தமாக வாங்கி சென்று முன்னோா்களை வழிபட ஏதுவாக மொத்தமாக பூஜைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.
திருத்தணியில்....
திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சரவணப்பொய்கையில் ஏராளமான பக்தா்கள் அதிகாலை முதலே திரண்டனா். அவா்கள் புனித நீராடி, தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் மற்றும் நீா்க்கடன் செலுத்தி வழிபட்டனா்.
ஆடி அமாவாசை தினத்தில் முன்னோா்களை நினைத்து தா்ப்பணம் செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவதால், திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் சரவணப்பொய்கைக்கு வந்தனா்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு சரவணப்பொய்கை பகுதியில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், அங்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.



பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆடி அமாவாசை காவிரி ஆற்றில் தண்ணீா் இல்லாததால் ஆழ்குழாயில் பக்தா்கள் புனித நீராடல்

ஆடி அமாவாசை: கும்பகோணத்தில் காவிரிக் கரையில் மக்கள் வழிபாடு

ஆடி அமாவாசை: முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து வழிபாடு

திருத்தணி முருகன் கோயில் ஆடி பரணியில் குவிந்த பக்தா்கள்
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



