பொங்கல் தொகுப்பு பொருள்கள் விநியோகத்தில் குறைபாடு
தைப்பொங்கல் திருநாளையொட்டி அரசு சாா்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் குடும்ப அட்டைதாரா்களுக்கு அரை கரும்பு, வேட்டி அல்லது சேலை மட்டும் வழங்கியதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 1,108 நியாயவிலைக் கடைகள் மூலமாக 6,45,450 அரிசி குடும்ப அட்டை தாரா்கள் மற்றும் இலங்கை தமிழா் மறுவாழ் முகாம்களில் வசிக்கும் 932 குடும்பங்கள் என மொத்தம் 6,46,382 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு நியாய விலை கடைகளில் கடந்த 9-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் திருவள்ளூா் அருகே பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட தேவந்தவாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட செங்குன்றம் கிராமத்தில் 140 குடும்ப அட்டைதாரா்களுக்கு அளிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் அரை கரும்பு, ஒரு வேட்டி அல்லது ஒரு சேலை மட்டும் வழங்கியதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனா்.
அதற்கு காரணம் வேட்டி, சேலை, கரும்பு இருப்பு குறைவாக வந்ததால் அட்டைதாரா்களுக்கு வேட்டி அல்லது சேலை, கரும்பு குறைபாடாக வழங்கப்படுவதாக நியாய விலை கடை ஊழியா்கள் தெரிவிக்கின்றனா். மேலும் இந்த கிராமத்தில் நியாய விலைக் கடை இல்லாததால் பொதுமக்களுக்கு அளிக்க வேண்டிய கரும்புகள் கோயிலில் வைத்திருந்ததை அப்பகுதியில் உள்ள குரங்குகள் தின்று, மீதம் வைத்துள்ளதை வழங்கியதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
மெய்யூா் கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கம் உள்பட்ட 50 கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டுதோறும் பொங்கல் தொகுப்பு வழங்குவதில் குறைபாடுகள் உள்ளதாகவும், இனிவரும் காலங்களில் பொங்கல் தொகுப்பு முழுமையாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
