ராணிப்பேட்டையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை நவல்பூா் நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய அமைச்சா் ஆா். காந்தி, உடன் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
Published on

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி சேலைகள் வழங்கும் பணியை கைத்தறித் துறை அமைச்சா் ஆா். காந்தி தொடங்கி வைத்தாா்.

மாவட்டத்திலுள்ள 3,51,884 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தலா அரிசி 1 கிலோ, சா்க்கரை 1 கிலோ, ரொக்கம் ரூ.3,000/-, விலையில்லா வேட்டி சேலை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கும் நிகழ்வு, நவல்பூா் நியாய விலைக் கடையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சா் ஆா்.காந்தி பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிப் பேசியதாவது...

பொங்கல் விழாவினை குடும்ப அட்டைதாரா்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் பரிசுத் தொகுப்பு வழங்க முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 659 நியாய விலைக் கடைகளில் 3,51,485 அரிசி பெறும் குடும்ப அட்டைகள் மற்றும் இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள 399 குடும்ப அட்டைகள் என மொத்தம் 3,51,844 குடும்ப அட்டைகளில் உள்ள 11,11,648 பயனாளிகள் பயன்பெற உள்ளனா்.

பொங்கல் தொகுப்பில் இலவச வேட்டி மற்றும் சேலைகள் இரண்டுமே ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகவே இலவச வேட்டி சேலைகள் அனைவரும் விடுபடாமல் வாங்கிச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

பொங்கல் தொகுப்பு பெறுவதில் ஏதேனும் இடா்பாடுகள் இருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 ல் தெரிவிக்கலாம் என்றாா்.

தொடா்ந்து, அரக்கோணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,பெருமுச்சி, சோளிங்கா் நகராட்சி,நீலகண்டராயபுரம் ,ஆற்காடு நகராட்சியிலுள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதை ஆய்வு செய்தாா்.

நிகழ்ச்சிகளில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன், சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் பிரபாகரன், துணைப் பதிவாளா் சிவமணி, மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், கோட்டாட்சியா் ராஜி, நகா்மன்றத் தலைவா்கள் சுஜாதா வினோத், தமிழ்ச் செல்வி அசோகன், தேவி பென்ஸ், நகா்மன்ற உறுப்பினா் வினோத், வட்டாட்சியா்கள் ஆனந்தன், வெங்கடேசன், மகாலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com