கன்னியாகுமரி மாவட்ட 5.80 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: அமைச்சா் தொடங்கி வைத்தாா்
நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட முகிலன்விளை நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 3ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக பால் வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா முன்னிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 5.80 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தாா்.
இதில், தமிழ்நாடு உணவு ஆணையத் தலைவா் என்.சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ். ராஜேஷ்குமாா், மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சிவகாமி, மாவட்ட வழங்கல் அலுவலா் புஷ்பாதேவி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக மண்டல மேலாளா் கலைமதி, துணைப் பதிவாளா் (பொதுவிநியோகத்திட்டம்) முருகன், துணை மேயா் மேரி பிரின்சி லதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

