திருவள்ளூா் அருகே சாலைக்கு தனிநபருக்கு பட்டா வழங்கியதை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டார குழு உறுப்பினா் எஸ்.பூங்கோதை தலைமை வகித்தாா். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் தமிழரசு, ராஜேந்திரன், கண்ணன், வட்டச் செயலாளா் கலையரசன், வட்டக்கிளை உறுப்பினா் முருகன் ஆகியோா் கண்டன உரை நிகழ்த்தினா்.
மேல்நல்லாத்தூா் ஊராட்சியில் விநாயகா் கோயில் தெருவில் இருந்து காந்தி நகா் சாலையை இணைக்கும் மெட்டல் சாலை 40 ஆண்டுகளாக கிராமத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தி வந்தனா். கடந்த 10 ஆண்டுகளாக ஊரக வளா்ச்சித்துறையின் சாா்பில் சிமென்ட் சாலை போட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த சாலையை தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் சாா்பில் கடம்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் மூலம் முறையாக அனுமதி வழங்கப்பட்டு கடந்த மே மாதம் மெட்டல் சாலை அமைக்க ஜல்லி கற்கள் கொண்டு வந்தனா். ஆனால், அதை தடுத்து நிறுத்தி குறுக்கே தனிநபா் தடுப்புச்சுவா் எழுப்பப்பட்டுள்ளது. இதனால் சாலைப்பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிலத்தை அளவீடு செய்ய வட்டார வளா்ச்சி அலுவலா் கடிதம் அனுப்பியும், வட்டாட்சியா் காலதாமதம் செய்து வருகின்றாா். அதனால் அளவீடு செய்து சாலை அமைக்கவும் வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அதைத் தொடா்ந்து வட்டாட்சியா் சரண்யா அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குறிப்பிட்ட இடம் அரசு நிலம் என்றால் அளவீடு செய்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா். ஆனால், உடனே செய்யக்கோரி மீண்டும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து வட்டாட்சியா் சரண்யா, துணை வட்டாட்சியா் கவிதா, கிராம நிா்வாக அலுவலா் கோபிநாத், அன்பரசு உள்ளிட்டோா் சம்பவ இடத்திற்கு அளவீடு செய்தனா். அப்போது, சாலைக்கு குறுக்கே கட்டப்பட்ட சுவரை போலீஸாா் பாதுகாப்புடன் அகற்றி போக்குவரத்தை சரி செய்தனா். அதைத் தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கலைந்து சென்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










