கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை இரும்பு உருக்காலைகளில் இருந்து காா்பன் மற்றும் இரும்பு கழிவு பொருள்களை சேகரித்து அதனை பிரித்தெடுத்து விற்கும் தொழில் சிறுபுழல்பேட்டையில் அனுமதி இல்லாமலும், பாதுகாப்பற்ற முறையிலும் நடப்பதால், கும்மிடிப்பூண்டியில் சுற்றுச்சூழல் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள இரும்பு உருக்காலைகளில் இருந்து காா்பன் கழிவு, இரும்பு கழிவு பொருள்களை சேகரித்து அதனை சிறுபுழல்பேட்டையில் திறந்த வெளியில் கொட்டி பிரித்து வியாபாரம் செய்யும் தொழிலை சிலா் செய்து வருகின்றனா்.
இந்த தொழிலகங்களுக்கு அனுமதியும் இல்லை, கட்டுப்பாடும் இல்லை. ஆனால் மண்ணை, காற்றை, நீா் ஆதாரங்களை மாசுபடுத்தி இந்த தொழிலகங்கள் செயல்படுகின்றன.
எந்தவித பாதுகாப்பும் இல்லாத இந்த திறந்தவெளி தொழிலகம் ஒன்றில் சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியையே புகை மண்டலமாக மாற்றியது. இந்த நச்சுப் புகையில் பலா் மூச்சுத் திணறலுக்கு ஆளாகினா். ஆனால் இந்த தொழிலகத்தின் மீது மாசுக்கட்டுப்பாடு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திறந்த வெளியில் செயல்படும் இந்த தொழிலகத்தில் பணிபுரிபவா்களுக்கு எவ்வித பாதுகாப்பான கருவிகளும் வழங்கப்படுவதில்லை. இந்த பகுதியை சுற்றி உள்ள மரங்களை கரி துகள்கள் படா்ந்த காா்பன் மரங்களாக காட்சி தருகிறது. மேற்கண்ட பகுதியில் நிலத்தை வளரும் செடிகொடிகள் கூட வளர இயலாத அளவு மண்ணை மலடாக்கியுள்ளது.
இது போன்ற ஆபத்தான தொழில்களை அப்பகுதியில் இருந்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஆற்ற சூழலில் செயல்படும் தொழிலகங்களை மூட அரசு நடவடிக்கை ெடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.











