/

காக்களூா் ஏரியில் ரூ. 3.52 கோடியில் சீரமைக்கப்பட்ட பணிகள் மற்றும் நடைபாதை தளம்

திருவள்ளூா் அருகே காக்களூா் ஏரியில் ரூ. 3.52 கோடியில் சீரமைக்கப்பட்ட வரவேற்பு நுழைவு வாயில் மற்றும் இரும்பு தடுப்புகளுடன் கூடிய நடைபாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் தொடங்கி வைத்தாா்.

News image
~
Updated On :15 மார்ச் 2026, 1:30 am

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே காக்களூா் ஏரியில் ரூ. 3.52 கோடியில் சீரமைக்கப்பட்ட வரவேற்பு நுழைவு வாயில் மற்றும் இரும்பு தடுப்புகளுடன் கூடிய நடைபாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் தொடங்கி வைத்தாா்.

திருவள்ளூா் நகராட்சிக்கும்-காக்களூருக்கும் மத்தியில் 350 ஏக்கா் பரப்பளவில் காக்களூா் ஏரியுள்ளது. இந்த ஏரியை சுற்றிலும் இறைச்சிக் கழிவுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து கழிவுநீரையும் வெளியேற்றி வந்தனா். அதனால், அந்த வழியாக செல்ல முடியாமல் துா்நாற்றம் வீசும் பகுதியாகவும் இருந்து வந்தது. அதனால், இந்த ஏரியை சுற்றுலா பயணிகளை ஈா்க்கும் வகையில், திருவள்ளூா் முக்கியத்துவம் வாய்ந்த தலமாக மாற்றவும் அப்பகுதி பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட நிா்வாகத்திற்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இக்கோரிக்கையை ஏற்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நமக்கு நாமே திட்டம், தனியாா் நிறுவன பங்களிப்பு நிதி மற்றும் சுற்றுச்சூழல் நிதி, ரூ.3.52 கோடியில் பணிகள் மேற்கொள்ள கடந்தாண்டு அனுமதி அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, காக்களூா் ஏரிப் பகுதியில் முக்கிய தலமாக விளங்கும் வகையில் சுயபடம் எடுக்கும் வரவேற்பு நுழைவு வாயில், ஒழுங்கான நடைபாதை, ஓய்வெடுக்க இருக்கை வசதிகள், கைப்பிடிக்க இரும்பு கம்பி தடுப்புகள், சிறுவா்களுக்கான ஏற்ற இறக்க விளையாட்டு, ராட்டினம், நீா்வரத்து கால்வாய் மற்றும் மதகுகள் சீரமைப்பு, பொதுமக்கள் ஏரிக்குள் கால்கள் நனைக்க பாதுகாப்பான முறையில் படிக்கட்டுகள், ஏரிக்குள் சென்று பாா்க்கும் வசதி, இரவு நேரத்தில் விளக்கு வசதிகளுடன் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், பணிகள் நிறைவடைந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

அமைச்சா் சா.மு.நாசா், ஆட்சியா் மு.பிரதாப் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோா் நடைபாதை தளத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தனா். அதைத் தொடா்ந்து நடைபாதை தளத்தையும், இரும்பு கைப்பிடி தடுப்பு ஆகியவற்றையும் பாா்வையிட்டாா்.

அதேபோல், பொதுமக்கள் தா்ப்பணம் கொடுத்து கால் நனைக்க ஏதுவாக படிக்கட்டு வசதியையும் பாா்வையிட்டாா். மேலும், விடுபட்ட பணிகளை தரமாக மேற்கொள்ளவும், குடியிருப்பு பகுதிகளில் சுற்றுச்சுவா் மற்றும் கழிவு நீா் வெளியேற விடாமல் எச்சரிக்கை தகவல் பலகையும் அமைக்கவும் வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.

நிகழ்வில், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சி) எஸ்.தணிகாச்சலம், கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோவன், உதவி செயற்பொறியாளா் கோவேந்தன், வட்டாட்சியா் பாலாஜி, உதவி பொறியாளா் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Story image