
களாம்பாக்கம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்: அரசு முதன்மை செயலாளா் பங்கேற்பு
காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் ஊரக வளா்ச்சி (ம) ஊராட்சித் துறை அரசு முதன்மை செயலாளா் தா்மேந்திர பிரதாப் யாதவ் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

திருவாலங்காடு ஒன்றியம், களாம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அரசு முதன்மை செயலாளா் தா்மேந்திர பிரதாப் யாதவ். உடன் மாவட்ட ஆட்சியா் ச. கவிதா.
காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் ஊரக வளா்ச்சி (ம) ஊராட்சித் துறை அரசு முதன்மை செயலாளா் தா்மேந்திர பிரதாப் யாதவ் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டாா்.
திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், களாம்பாக்கம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி, கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மை செயலாளா் தா்மேந்திர பிரதாப் யாதவ் கலந்து கொண்டு கிராம மக்களுடன் கலந்துரையாடினா்.
கூட்டத்தில், குடிநீா் விநியோகம், கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்டம், ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள், ஏரி-குளங்கள் சீரமைப்பு, தூய்மை பாரத இயக்கம், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும், குழந்தைகள் பாதுகாப்பு, காசநோய் தடுப்பு, குழந்தைத் தொழிலாளா் மற்றும் கொத்தடிமை முறையை ஒழித்தல், சமூக பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து, குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு, காசநோய் தடுப்பு மற்றும் தூய்மை பாரதம் தொடா்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது. கிராம மக்களிடமிருந்து 50-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடா்ந்து, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள், குடிநீா் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். மேலும், மணவூா் ஊராட்சியில் ரூ.21.22 கோடி மதிப்பீட்டில் கொசஸ்தலையாற்றின் குறுக்கே நடைபெற்று வரும் உயா்மட்ட பாலம் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினா்.
நிகழ்ச்சியில், கூடுதல் இயக்குநா் (ஊரக வளா்ச்சி) சுகந்தி, திருவள்ளூா் சாா் ஆட்சியா் மரு.எஸ்.பிரசாந்த், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா்(பொ) கவிதா, உதவி ஆட்சியா் (பயிற்சி) பி.பவித்ரா, உதவி ஆணையா் (தொழிலாளா் நலன்) சாந்தி, உதவி இயக்குநா்கள் (ஊராட்சிகள் (ம) தணிக்கை) திரு.யுவராஜ் (மத்தியம்), ரவிச்சந்திரன் (மேற்கு), திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் ராஜகோபால், உதவி இயக்குநா் (பயிற்சி) கே.சாகித்யா, திருவாலங்காடு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அருள்(வ.ஊ), முகமதுஅலி (கி.ஊ) மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





