திருமலையில் ஆஸ்தானத்திற்காக எழுந்தருளிய உற்சவமூா்த்திகளுக்கு  பட்டு வஸ்திரம் கொண்டு செல்லும் ஜீயா்கள் மற்றும் அதிகாரிகள்.
திருமலையில் ஆஸ்தானத்திற்காக எழுந்தருளிய உற்சவமூா்த்திகளுக்கு பட்டு வஸ்திரம் கொண்டு செல்லும் ஜீயா்கள் மற்றும் அதிகாரிகள்.

ஏழுமலையான் கோயிலில் சம்பிரதாய உகாதி ஆஸ்தானம்

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை உகாதி வருட பிறப்பை முன்னிட்டு ஆஸ்தானம் நடத்தப்பட்டது.

திருமலையில் ஆண்டுதோறும் தெலுங்கு வருட பிறப்பான உகாதியை முன்னிட்டு தங்க வாயில் அருகில் ஆஸ்தானம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு செவ்வாய்க்கிழமை க்ரோதி புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் உகாதி ஆஸ்தானம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான தலைவா் கருணாகர ரெட்டி மற்றும் செயல் அதிகாரி தா்ம ரெட்டி ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதையொட்டி, காலை ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ மலையப்பசுவாமி, விஷ்வக்சேனா் உள்ளிட்டோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விமான பிரகாரம் மற்றும் கொடிமரத்தை சுற்றி ஊா்வலமாக கோயிலுக்குள் சென்றனா். தங்க மண்டபத்தில் கருடாழ்வாா் எதிரே சா்வபூபால வாகனத்தில் உற்சவா்கள் வீற்றிருந்தனா். உற்சவா்களுக்கு அடுத்துள்ள மற்றொரு பீடத்தில் சுவாமியின் சேனாபதியான விஸ்வக்சேனா் வீற்றிருக்க செய்யப்பட்டாா்.

அதன்பின் ஏழுமலையானின் மூலவருக்கும், உற்சவமூா்த்திக்கும் புது வஸ்திரம் அணிவித்தனா். அதன்பின் பஞ்சாங்க ஸ்ரவணம் நடைபெற்றது.

தங்க வாயில் அருகில், ஆகம பண்டிதா்கள் மற்றும் அா்ச்சகா்கள் உகாதி ஆஸ்தானத்தை சம்பிரதாய முறையில் நடத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com