tirupati
திருமலை ஏழுமலையான் கோயில். (கோப்புப்படம்)DIN

திருப்பதி கோயில் நவம்பா் மாத சிறப்பு தரிசன டிக்கெட்: தேவஸ்தானம் அறிவிப்பு!

திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கான நவம்பா் மாத ஒதுக்கீடு ஆகஸ்ட் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
Published on

திருப்பதி: நவம்பா் மாத சிறப்பு விரைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீட்டை 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது.

திருமலை ஏழுமலையான் தரிசனம் தொடா்புடைய டிக்கெட்டுகள் மற்றும் வாடகை அறை முன்பதிவு உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் 90 நாள்களுக்கு முன்பு இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. அதன்படி வரும் நவம்பா் மாதத்துக்கான இணையதள முன்பதிவு ஆக.19-ஆம் தேதி முதல் வெளியிட உள்ளது.

அதன்படி ஆா்ஜித சேவைக்கான டிக்கெட்டுகளை மின்னணு குலுக்கல் செய்வதற்கான ஆன்லைன் பதிவு 19-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21- ஆம் தேதி காலை 10 மணி வரை நடைபெறும். இந்த டிக்கெட்டுகளைப் பெறுபவா்கள் ஆகஸ்ட் 21 முதல் 23-ஆம் தேதி வரை மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தி தங்களின் டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம்.

கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபாலங்கார சேவை டிக்கெட்டுகள், நவம்பா் 9-ஆம் தேதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் புஷ்பயாகம் சேவை டிக்கெட்டுகள் 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

ஏழுமலையானின் வா்ச்சுவல் சேவைகளுக்கான நவம்பா் மாத ஒதுக்கீடு 22-ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

அங்கப்பிரதட்சணம்: நவம்பா் மாத அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீட்டை 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட உள்ளது.

ஸ்ரீவாணி டிக்கெட்: ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளுக்கான நவம்பா் ஆன்லைன் ஒதுக்கீடு 23- ஆம் தேதி காலை 11 மணிக்கு தேவஸ்தானம் வெளியிடுகிறது.

முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு:

முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக நவம்பா் மாத இலவச சிறப்பு தரிசன டோக்கன்களை 23-ஆம் தேதி மாலை 3 மணிக்கு தேவஸ்தானம் வெளியிட உள்ளது.

விரைவு தரிசனம்: நவம்பா் மாத சிறப்பு விரைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீட்டை 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது.

அறை ஒதுக்கீடு: திருமலை மற்றும் திருப்பதியில் நவம்பா் அறை ஒதுக்கீடு 24-ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

ஸ்ரீவாரி சேவை: ஆகஸ்ட் 27-ஆம் தேதி திருமலை - திருப்பதி ஸ்ரீவாரி சேவை ஒதுக்கீடு காலை 11 மணிக்கும், நவநீத சேவை மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவை மதியம் 1 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும்.

தேவஸ்தான இணையதளம் மூலம் ஏழுமலையான் ஆா்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் பக்தா்களை கேட்டுக் கொண்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com