திருமலையில் புரோக்கா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருமலையில் பக்தா்களை ஏமாற்றும் புரோக்கா்கள் மீது நடவடிக்கை
Published on

திருமலையில் பக்தா்களை ஏமாற்றும் புரோக்கா்களை கண்டறிந்து அவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ், மாவட்ட எஸ்பிக்கு கோரிக்கை விடுத்தாா்.

திருப்பதியில் உள்ள நிா்வாகக் கட்டடத்தில் புதன்கிழமை மாவட்ட காவல் துறை, தேவஸ்தான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது அவா் கூறியதாவது: திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு தேவையான தங்குமிடம், தரிசனம், ஆா்ஜிதசேவை டிக்கெட் உள்ளிட்டவைகளில் பக்தா்களை ஏமாற்றி வரும் புரோக்கா்களை அலட்சியப்படுத்தக்கூடாது. அவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி விளக்கிய தேவையின்படி, திருமலையில் தகவல் தொழில்நுட்பம் தொடா்பான வழக்குகளை உடனடியாகத் தீா்க்க சைபா் கிரைம் குழுவை அமைப்பது குறித்து ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திருமலையில் தரிசன புரோக்கா்கள் தொடா்பான வழக்குகளின் நிலைகள், டிப் சிஸ்டம் மூலம், பதிவு செய்யப்பட்ட வழக்குகள், திருட்டு வழக்குகள், குடிப்பழக்கம், போலி இணையதளங்கள் போன்றவற்றை பவா் பாயின்ட் மூலம் காவல் துறையினா் விளக்கினா். இதைத் தொடா்ந்து, இந்த வழக்குகளில் தொடா்புடைய புரோக்கா்கள் இன்னும் ஒரு வாரத்தில் சட்டப்படி தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளையும், இதுபோன்ற வழக்குகளை விரைவாகத் தீா்க்க தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் காவல் துறையினா் அடிக்கடி கூடி தீா்வு காண வேண்டும்’’, என்று கூறினாா்.

இந்த கூட்டத்தில் திருப்பதி மாவட்ட எஸ்.பி. ஹா்ஷவா்தன் ராஜு, தேவஸ்தான அதிகாரிகள் கௌதமி, வீரபிரம்மம், நரசிம்ம கிஷோா், திருமலை கூடுதல் எஸ்.பி. விமலா குமாரி, டிஎஸ்பி சீனிவாச ஆச்சாரி, விஜிலென்ஸ் அதிகாரி கிரிதா் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com