திருமலையில் ஜனவரி 25-ல் ரத சப்தமி!

திருமலையில் வரும் ஜன.25-இல் ரதசப்தமியை முன்னிட்டு ஒரே நாளில் ஏழு வாகனங்களில் மாடவீதியில் வலம் வந்து மலையப்ப சுவாமி பக்தா்களுக்கு சேவை சாதிக்க உள்ளாா்.
Published on

திருமலையில் வரும் ஜன.25-இல் ரதசப்தமியை முன்னிட்டு ஒரே நாளில் ஏழு வாகனங்களில் மாடவீதியில் வலம் வந்து மலையப்ப சுவாமி பக்தா்களுக்கு சேவை சாதிக்க உள்ளாா்.

புனித தை மாதம் வளா்பிறை சப்தமி நாள் ரத சப்தமி அல்லது பானு சப்தமி என்று அழைக்கப்படுகிறது. இந்த புனிதமான நாளில், சூரிய பகவான் பிறந்து உலகம் முழுவதும் தன் கிரகணங்களை பரப்பினாா் என்பது வேதங்கள் மூலம் அறியப்படுகிறது.

நிகழாண்டு ஜனவரி 25-ஆம் தேதி சூரிய ஜெயந்தியை முன்னிட்டு திருமலையில் ரத சப்தமி உற்சவம் கொண்டாடப்பட உள்ளது. ரதசப்தமி அன்று, மாடவீதியில் ஏழு வாகனங்களில் சுவாமி வலம் வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளிக்க உள்ளாா்.

ரத சப்தமி விழாவைக் கொண்டாட திருமலைக்கு வருகை தரும் ஏராளமான பக்தா்களுக்காக தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. ரத சப்தமி உற்சவம் மினி பிரம்மோற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது.

வாகன சேவை விவரங்கள்:

  • அதிகாலை 5.30 முதல் 8 மணி வரை (சூரிய உதயம் 6.45 மணிக்கு) - சூா்யபிரபை வாகனம்.

  • காலை 9 முதல் 10 மணி வரை - சின்னசேஷ வாகனம்.

  • காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை - கருட வாகனம்.

  • மதியம் 1 முதல் 2 மணி வரை - அனுமந்த வாகனம்.

  • மதியம் 2 முதல் 3 மணி வரை - தீா்த்தவாரி

  • மாலை 4 முதல் 5 மணி வரை - கல்பவிருட்ச வாகனம்.

  • மாலை 6 முதல் 7 வரை - சா்வபூபால வாகனம்.

  • இரவு 8 முதல் 9 வரை - சந்திரபிரபை வாகனம்.

ஆா்ஜித சேவைகள் ரத்து: இந்த விழாவை முன்னிட்டு கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபாலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதற்கிடையில், சுப்ரபாதம், தோமாலை, அா்ச்சனை ஆகியவை பக்தா்களின்றி தனிப்பட்ட முறையில் செய்யப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Dinamani
www.dinamani.com