மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

திருமலையில் மலையப்ப சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் தொடக்கம்

ஜேஷ்டாபிஷேகத்தின் முதல் நாள் மாலை வைர கவசத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி.

News image

ஜேஷ்டாபிஷேகத்தின் முதல் நாள் மாலை வைர கவசத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி.

Updated On :27 ஜூன் 2026, 2:58 am IST

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை முதல் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் விமரிசையாக தொடங்கியது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் உற்சவமூா்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவித்திருந்த தங்கக் கவசம் களையப்பட்டு அதை செப்பனிட்டு மீண்டும் உற்சவமூா்த்திக்கு அணிவிக்கப்படும். இதை வருடாந்திர ஜேஷ்டாபிஷேகமாக தேவஸ்தானம் நடத்தி வருகிறது. ஆனி மாத பெளா்ணமி அன்று நிறைவு பெறும் விதம் இந்த ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்று வருகிறது. அதன்படி, திருமலை ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.

ஜேஷ்டாபிஷேகம் ஒவ்வொரு ஆண்டும் ஜ்யேஷ்ட மாதம் ஜ்யேஷ்ட நட்சத்திரத்தில் முடிவடையும் விதம் மூன்று நாள்களுக்கு செய்யப்படுகிறது. தினசரி நடக்கும் அபிஷேகங்களால் சுவாமிக்கு மிகவும் பழைமையான உற்சவமூா்த்திகள் அணிவிக்கப்படாமல் பாதுகாக்கும் வகையில், 1990-ஆம் ஆண்டு இந்தவிழா நடத்தப்படுகிறது. இதை முன்னிட்டு, கோயிலின் சம்பங்கி பிரதட்சிணத்தில் அமைந்துள்ள கல்யாண மண்டபத்தில் காலை, மாலை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, காலையில் ரித்விக்கள் சாந்தி ஹோமம் செய்தனா். சதகலச பிரதிஷ்டை ஆராதனைக்கு பின் சுவாமிக்கும், நாச்சியாா்களுக்கும் நவகலச பிரதிஷ்டை ஆவாஹனம், கங்கண பிரதிஷ்டை, அா்க்கியம், பத்யம், ஆச்சமணியம் சமா்பித்து, கங்கணதாரணம் செய்யப்பட்டது.

அதன்பின், ஸ்ரீமலையப்ப சுவாமிக்கு வைபவமாக ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்நபனதிருமஞ்சனம் நடைபெற்றது. இதில், வேத பண்டிதா்கள் ஸ்ரீசூக்தம், பூசூக்தம், புருஷ சூக்தம், நிலா சூக்தம், நாராயண சூக்தம் பாராயணம் செய்து, உற்சவ மூா்த்திக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்தனா்.

பின்னா் வைர கவசத்தில் சகஸ்ர தீபாலங்கார சேவை கண்டருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி மாலை 4 மணி முதல் 5 மணி வரை மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தனா்.

ஜேஷ்டாபிஷேகத்தின் 2-ஆம் நாள் முத்து கவசமும், நிறைவு நாள் தங்கக் கவசத்துடன் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி பக்தா்களுக்கு தரிசனம் அளிக்க உள்ளனா். நிகழ்ச்சியில், திருமலை பெரிய ஜீயா், சின்ன ஜீயா், செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தம்பதியினா், கோவில் துணை அதிகாரி லோகநாதம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.