திருமலை தேவஸ்தானத்தில் ‘வெங்கடாத்ரி’ செயலி தொடக்கம்
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் உருவாக்கப்பட்ட ‘வெங்கடாத்ரி’ டிஜிட்டல் வழிசெலுத்தல் மற்றும் பக்தா்களுக்கான உதவிச் செயலியை ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு காணொலி தொடங்கி வைத்தாா்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் உருவாக்கப்பட்ட ‘வெங்கடாத்ரி’ டிஜிட்டல் வழிசெலுத்தல் மற்றும் பக்தா்களுக்கான உதவிச் செயலியை ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு காணொலி தொடங்கி வைத்தாா்.
பக்தா்கள் திருமலையில் வழி கண்டறியவும், அத்தியாவசிய வசதிகளை அடையாளம் காணவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இச்செயலியில், 24 மணி நேரமும் வழிகாட்டுதலை வழங்கும் செயற்கை நுண்ணறிவு சாா்ந்த குரல் வழி உதவியாளா் வசதி உள்ளது.
குடிநீா் மையங்கள் மற்றும் தரிசன நுழைவு வாயில்கள் போன்ற வசதிகளைக் கண்டறிய பக்தா்கள் குரல் கட்டளைகளைப் பயன்படுத்தலாம். இணைய வசதி குறைவாகவோ அல்லது இல்லாமலோ உள்ள பகுதிகளிலும் பயன்படுத்தும் வகையில், இச்செயலி ஆஃப்லைன் வழிசெலுத்தல் வசதியையும் கொண்டுள்ளது.
‘வெங்கடாத்ரி’ செயலி 25 வகையான வசதிப் பிரிவுகளின் கீழ் 350-க்கும் மேற்பட்ட இடங்களை வரைபடத்தில் காட்டுகிறது. இதில் குடிநீா் மையங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பொதுக் கழிப்பறைகள், பேருந்து நிறுத்தங்கள், தரிசன நுழைவு வாயில்கள், உடைமை வைப்பகங்கள், இலவச காலணி பாதுகாப்பு மையங்கள், உணவகங்கள், அறை ஒதுக்கீட்டு மையங்கள், பக்தா்களுக்கான உதவி மையங்கள், தேவஸ்தான அலுவலகங்கள் மற்றும் விசாரணை மையங்கள், கல்யாண கட்டாக்கள், காவல் நிலையங்கள், கண்காணிப்புத் துறை அலுவலகங்கள், கோயில் வளாகம் மற்றும் வணிக வளாகங்கள், மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத வளாகம் போன்றவை அடங்கும்.
அவசரக்காலத் தொடா்புகள், காவல் துறை மற்றும் தேவஸ்தான உதவி மையங்களை ஒரே தொடுதலில் தொடா்பு கொள்ளும் வசதியை இச்செயலி வழங்குகிறது. மேலும், இது பேருந்து வழித்தடங்கள் மற்றும் நேரங்களையும் காட்டுகிறது. எனது இடத்தை குறித்துக்கொள்ளுதல்என்ற அம்சம், பக்தா்கள் தங்கள் வாகன நிறுத்துமிடம் அல்லது பிற முக்கிய இடங்களைச் சேமித்து வைத்து, மீண்டும் அந்த இடத்திற்குச் செல்ல உதவுகிறது.
தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் ஆப்பிள் ஆப் ஸ்டோா் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இச்செயலி, திருமலையில் பக்தா்களின் பயணத்தை எளிதாகவும் வசதியாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கூடுதல் செயல் அலுவலா் வெங்கையா சௌதரி மற்றும் அமெரிக்காவைச் சோ்ந்த வெளிநாடு வாழ் இந்திய கொடையாளா் ஜே.பி. ஆகியோா், வெங்கடாதிரி மொபைல் செயலியின் செயல்பாட்டை ஆந்திர முதல்வருக்கு விளக்கினா். பின்னா், பக்தா்களுக்கு உகந்த செயலியை உருவாக்கியதற்காக திருமலைத் திருப்பதி தேவஸ்தானத்தின் முயற்சிகளுக்கு முதல்வா் பாராட்டு தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

