எம்எல்ஏவை தாக்கியதாக சிறையில் அடைக்கப்பட்டவர் சாவு: உறவினர்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவை தாக்கியதாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்


திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவை தாக்கியதாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் புதன்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, எம்எல்ஏவைக் கைது செய்யக் கோரி, உயிரிழந்தவரின் உறவினர்கள் போளூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போளூர் நகரில் உள்ள அரசிங் தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் வசந்தம்மணி (எ) மணிகண்டன் (41). இவர், மேடை அலங்காரம் செய்யும் வேலை செய்து வந்தார்.
மேலும், கலசப்பாக்கம் தொகுதி அதிமுக எம்எல்ஏ வி.பன்னீர்செல்வத்துக்காக அந்தத் தொகுதியில் கட்சி நிகழ்ச்சிகளுக்கு வசந்தம்மணி மேடை அலங்காரம் செய்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், மேடை அலங்காரம் அமைத்ததற்காக வசந்தம்மணிக்கு எம்எல்ஏ பணம் தர வேண்டி இருந்ததாம். இந்தப் பணத்தை கேட்கச் சென்றபோது, வசந்தம்மணியை எம்எல்ஏவின் உதவியாளர்கள் தாக்கினராம்.
இதையடுத்து, கடந்த 19-ஆம் தேதி எம்எல்ஏ வி.பன்னீர்செல்வத்தை வசந்தம்மணி தாக்கினாராம். பின்னர், போளூர் காவல் நிலையத்தில் வசந்தம்மணி மீது எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் புகார் அளித்தார். அதன்பேரில், வசந்தம்மணியை போளூர் போலீஸார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
சிறையில் இந்த வசந்தம்மணிக்கு கடந்த 24-ஆம் தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதுடன், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில், வசந்தம்மணி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
2 இடங்களில் சாலை மறியல்: இதுகுறித்து தகவலரிந்த வசந்தம்மணியின் மனைவி சுனிதாவும், அவரது உறவினர்களும் போளூரில் உள்ள வேலூர் - திருவண்ணாமலை சாலையில் புதன்கிழமை காலை 11 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அங்கு வந்த திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, உதவிக் காவல் கண்காணிப்பாளர் ரவாளிப்ரியா, மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரங்கராஜன், போளூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன், காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, வசந்தம்மணியை 15 நாள்கள் காவலில் வைக்க வேலூர் விரைவு நீதிமன்ற நீதிபதி கனகராஜ் தான் உத்தரவிட்டிருந்தார்.
எனவே, அவரிடம் சென்று உங்களது குறைகள், புகார்களைக் கூறுங்கள் என அறிவுறுத்தி, காவல் வாகனத்தில் வசந்தம்மணியின் மனைவி, மகன், மகள் மற்றும் உறவினர்கள் என சுமார் 16 பேரை அனுப்பி வைத்தனர்.
இதேபோல, போளூர் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட வசந்தம்மணியின் மாமியார், உறவினர்களை பேருந்து நிலையத்தின் ஓரமாக அமர்ந்திருக்குமாறு கூறி அப்புறப்படுத்தியதுடன், அவர்களுக்கு போலீஸார் பாதுகாப்பு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...