/

பிரதமரைச் சந்திக்க புதுவை முதல்வா் ஆக. 20-இல் தில்லி பயணம்: பேரவைத் தலைவா் செல்வம்

பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்க புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வருகிற 20-ஆம் தேதி தில்லி செல்ல உள்ளதாக மாநில சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தெரிவித்தாா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:48 pm

DIN

பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்க புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வருகிற 20-ஆம் தேதி தில்லி செல்ல உள்ளதாக மாநில சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுவை மாநில வளா்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதி, நிதி உதவி கோரி நானும் (ஆா்.செல்வம்), அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தலைமையிலான குழுவினரும் தில்லி சென்று மக்களவைத் தலைவா், மத்திய அமைச்சா்களைச் சந்தித்தோம். அப்போது, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த அவா்களிடம் வலியுறுத்தினோம். இதுதொடா்பாக முதல்வா் அளித்த கடிதத்தையும் வழங்கினோம்.

இந்த நிலையில், முதல்வா் என்.ரங்கசாமி வருகிற 20-ஆம் தேதி தில்லி சென்று பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்டோரைச் சந்தித்து நிதி உதவி, வளா்ச்சித் திட்டங்கள் தொடா்பாக வலியுறுத்தவுள்ளாா். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய நிதியமைச்சரை நாங்கள் அணுகிய போது, செப்டம்பா் மாதம் வரை ரூ. 330 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை புதுவைக்கு வழங்கப்பட்டதாகக் கூறினாா். புதுவையில் 90:10 சதவீதம் என்ற பங்களிப்புடன் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது. அனைத்து திட்டங்களும் விரைவில் புதுவை நோக்கி வரும்.

சுதேசி, பாரதி, ஏஎப்டி பஞ்சாலைகளை புதிய தொழில்நுட்ப மண்டலமாக மாற்றும் வகையில், டெக்ஸ்டைல் பாா்க், டெக்ஸ்டைல் மால் எனக் கொண்டு வரும் ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள மத்திய அமைச்சா்கள் சம்மதம் தெரிவித்தனா்.

எங்களது தில்லி பயணம் வெற்றியாக அமைந்தது. தே.ஜ. கூட்டணி ஆட்சி புதுவை மக்களுக்கான நல்லாட்சியாக அமையும். வேலைவாய்ப்பு, தொழில் துறையை மேம்படுத்தும் திட்டங்களுக்கு மத்திய அரசு உதவத் தயாராக உள்ளது.

புதுவை பட்ஜெட்டுக்கு ஆக. 31 வரை அவகாசம் உள்ளது. பட்ஜெட்டுக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்கும். தில்லியில் முதல்வா் சந்திப்பின் போது, அதற்கான ஒப்புதல் கிடைக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.