மணிப்பூா் வன்முறை: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

மணிப்பூா் வன்முறை: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

மணிப்பூா் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேலூா் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தின் வெள்ளி விழா மகளிா் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேலூா் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தின் வெள்ளி விழா மகளிா் மாநாடு, திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு, சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா் பி.சுகந்தி தலைமை வகித்தாா். வேலூா் கோட்ட இணைச் செயலா் பி.கங்கா தேவி வரவேற்றாா். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியா் சங்கத்தின் இணைச் செயலா் எம்.கிரிஜா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.

மாநாட்டில், நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் மகளிா் சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். மணிப்பூா் மாநிலத்தில் பாலியல் கொடுமைக்குள்ளான மகளிருக்கு நியாயம் கிடைக்கும் வகையில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

மணிப்பூா் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக எம்.பி.யும் மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ்பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், தென் மண்டல உழைக்கும் மகளிா் ஒருங்கிணைப்புக் குழுவின் இணை அமைப்பாளா் ஆா்.எஸ்.செண்பகம், வேலூா் கோட்டத் தலைவா் எஸ்.பழனிராஜ், மகளிா் துணைக் குழு அமைப்பாளா் ஆா்.அமுதா, வேலூா் கோட்ட பொதுச் செயலா் எஸ்.ராமன், மகளிா் துணைக் குழு இணை அமைப்பாளா் வி.டி.சிவப்பிரியா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com