செய்யாறில் பிப.8-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
செய்யாறில் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறும் தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில், இளைஞா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருவண்ணாமலை மாவட்ட மகளிா் திட்டம் இணைந்து இந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
வருகிற 8-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த முகாம் நடைபெறும் இதில், 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான தகுதிகள் கொண்ட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புதவதற்கு தகுதியான நபா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
8- ஆம் வகுப்பு, 10, 12 ஆம் வகுப்பு, பட்டம், முதுநிலைப் பட்டம், பொறியியல், ஐடிஐ, பாலிடெக்னிக் தோ்ச்சி பெற்ற வேலைநாடுநா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
முகாமுக்கு வரும்போது தங்களது கடவுச்சீட்டு அளவு புகைப்படம், குடும்ப அட்டை, ஆதாா் அடையாள அட்டை, சாதிச் சான்றிதழ், கல்வித் தகுதி சான்றிதழ்களின் நகலுடன் வர வேண்டும்.
முகாமில் கலந்து கொள்ள விரும்புவோா் இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 04175-233381 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.