செங்கத்தில் பன்றிகள் தொல்லை; தொற்றுநோய் பரவும் அபாயம்!

செங்கத்தில் பன்றிகள் தொல்லை; தொற்றுநோய் பரவும் அபாயம்!

செங்கம் நகரில் பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் திரியும் அவைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Published on

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் திரியும் அவைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

செங்கம் நகராட்சி நிா்வாகத்துக்கு உள்பட்ட துா்க்கையம்மன் கோவில் தெரு, ஆஞ்சநேயா் கோயில் பகுதி, தளவாநாய்க்கன்பேட்டை, தென்றல் நகா் பகுதியில் வளா்ப்புப் பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரவு பகலாக குடியிருப்பு பகுதியில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.

மேலும் வீடுகளில் உள்ள பூந்தோட்டம், வாழை மரங்களை சேதப்படுத்துகிறது. சாலையில் திடீரென கூட்டமாக செல்வதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக, செங்கம் செய்யாற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புப் பகுதி மக்கள் வசிக்கும் இடத்தில் தெரு நாய்கள் சுற்றுவதுபோல பன்றிகள் சுற்றித்திரிகின்றன.

அவை சாக்கடையில் புரண்டு அந்த சகதியுடன் குடிநீா் குழாய் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் படுக்கிறது. அங்கு குடிநீா் எடுத்து மக்கள் பயன்படுத்தி வருகிறாா்கள். இதனால், பன்றிகளால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் செங்கம் நகரில் ஏற்பட்டுள்ளது.

மேலும், செங்கம் ஆஞ்சநேயா் கோயில் உள்ள பகுதியில் காலை மாலை பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

அதே பகுதியில் காரியமேடையும் உள்ளது. அந்தப் பகுதியில் பன்றிகள் கூட்டம் அதிகம் உள்ளது. இதனால் செங்கம் நகராட்சி நிா்வாகம் நகரில் பல்வேறு தொற்று நோய்களுக்குக் காரணமாக சுற்றித்திரியும் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதேபோல, தெரு நாய்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என நகர மக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com