பழங்குடியினருக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை
வந்தவாசியை அடுத்த கீழ்க்குவளைவேடு ஊராட்சிக்கு உள்பட்ட பழங்குடியினா் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
வந்தவாசி துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷிடம் மாா்க்சிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா், மாவட்டக்குழு உறுப்பினா் எஸ்.சுகுணா, இடைக்குழு உறுப்பினா் ஆனந்தன் மற்றும் பழங்குடியினா் இந்த மனுவை அளித்தனா்.
மனு விவரம்:
கீழ்க்குவளைவேடு- பழஞ்சூா் சாலையில் உள்ள பழங்குடியினா் பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.
இவா்களின் குடிநீா் தேவைக்காக புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டும் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் மக்கள் குடிநீருக்காக பெரும் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
மேலும், மின்கம்பங்கள் இருந்தும் தெருமின் விளக்குகள் பொருத்தப்படவில்லை. எனவே, உடனடியாக தெரு மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

