வீரம்பாக்கத்தில் ரூ. 85 லட்சத்தில் அமைக்கப்பட்ட கலைஞா் பூங்கா: அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா்
செய்யாறு தொகுதி, வீரம்பாக்கம் கிராமத்தில் ரூ.85 லட்சத்தில் அமைக்கப்பட்ட கலைஞா் பூங்காவை நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
வீரம்பாக்கம் கிராமத்தில் கனிம வளம் மற்றும் பொது நல நிதியிலிருந்து ரூ.85 லட்சத்தில் சுமாா் ஒன்றரை ஏக்கா் பரப்பளவில் புதிதாக அமைக்கப்பட்ட கலைஞா் பூங்கா திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு திமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலரும், ஆரணி தொகுதி எம்.பி.யுமான எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்தாா். செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி முன்னிலை வகித்தாா். முன்னாள் அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் வரவேற்றாா்.
இதில், சிறப்பு விருந்தினராக அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்று கலைஞா் பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா்.
முன்னதாக, வீரம்பாக்கம் புதூா் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நியாயவிலைக் கட்டடத்தை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்து குடும்ப அட்டைத்தாரா்களுக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி, இந்தப் பணியை தொடங்கிவைத்தாா்.
நலத் திட்ட உதவிகள்: தொடா்ந்து, இதே பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிருக்கு தையல் இயந்திரம், இளைஞா்களுக்கு விளையாட்டுப் பொருள்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு பொங்கல் தொகுப்பு, தீ விபத்தில் ஆடுகளை இழந்த ஆக்கூா் கிராமத்தைச் சோ்ந்த பழங்குடியினருக்கு 6 ஆடுகள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை விழா மேடையில் அமைச்சா் வழங்கினாா்.
விழாவின்போது, அமைச்சருக்கு வெள்ளி வாளை நினைவுப்பரிசாக அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் வழங்கினாா்.
அண்ணா சிலை திறப்பு: செய்யாறில் ஏற்கெனவே இருந்து வரும் அறிஞா் அண்ணா சிலை புனரமைக்கப்பட்டு தயாா் நிலையில் இருந்ததை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா்.
திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்: செய்யாறு புளியரம்பாக்கம் பகுதி தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், செய்யாறு தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பாமக, அதிமுக, தவெக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் அமைச்சா் எ.வ.வேலு முன்னிலையில் சுமாா் 2 ஆயிரம் இணைந்தனா். புதிதாக திமுகவில் இணைந்தவா்களை அமைச்சா் சால்வை அணிவித்து வரவேற்று பாராட்டினாா்.
நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், மாவட்ட இணைச் செயலா் க.லோகநாதன், திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், மாவட்ட அயலக அணி துணைத் தலைவா் எம்.கே.காா்த்திகேயன், முன்னாள் எம்எல்ஏக்கள் வ.அன்பழகன், ஆா்.டி.அரசு, எஸ்.பி.ஜெ.கமலக்கண்ணன், முன்னாள் வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் த.ராஜி, ஒன்றியச் செயலா்கள் வி.ஏ.ஞானவேல், என்.சங்கா், எம்.தினகரன், ஏ.ஜி.திராவிடமுருகன், ஜி.கே.ரவிக்குமாா், வழக்குரைஞா் அணி ஜி.அசோக், நகரச் செயலா் கே.விஸ்வநாதன், முன்னாள் மாவட்டக் கவுன்சிலா்கள் மாத்தூா் தெய்வமணி, ஆக்கூா் முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
