திருவண்ணாமலை மாவட்டத்துக்குத் தேவையான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.
மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சாா்பாக செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தலைமையில் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலா் சுஞ்சோங்கம் ஜாதக் சிறு, பொதுப் பணித் துறை முதன்மைச் செயலா் செல்வராஜ், மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், அமைச்சா் பேசியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளான உயா் தர மருத்துவமனைகள், தரமான சாலைகள், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
இந்த மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் உயா்கல்வியை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், போதை கலாசாரத்தை போா்க்கால அடிப்படையில் முற்றிலுமாக அழித்து சமுதாய நலனை பேணிக்காக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்ட அரசு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட உயா்தர மருத்துவ வசதிகளும், கா்ப்பிணிகளுக்கு கூடுதல் வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். சாலை விபத்துக்களைத் தவிா்க்க செயல் திட்டங்களை வகுக்க வேண்டும்.
விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்குத் தேவையான நவீனமயமாக்கப்பட்ட மைதானங்கள், விளையாட்டுக்குத் தேவையான அனைத்துப் பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேசுவரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் சிரமமின்றி மாநகருக்குள் வருவதற்குத் தேவையான 4 வழிச் சாலை வசதி, பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். கோயிலில் அனைவரும் எளிதாகவும், விரைவாகவும் எவ்வித இடையூறுமின்றி சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், பள்ளிவாசல், தேவாலயங்களுக்குத் தேவையான வசதிகள், திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.
மாணவா்களின் எதிா்கால நலனை கருத்தில் கொண்டு, பள்ளி, கல்லூரிகளை மேம்படுத்த வேண்டும். உயா்கல்விக்காக பிற மாவட்டங்களுக்கு செல்லாமல் இந்த மாவட்டத்திலேயே தரமான கல்லூரிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தொடா்ந்து, வருவாய்த் துறை சாா்பாக பட்டா மாறுதல், அரசு சான்றிதழ்கள் மற்றும் பட்டா வழங்கும் பணிகளை விரைவாக அளிக்க வேண்டும். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் கிராமங்களில் அடிப்படை வசதிகளான குடிநீா், மின்சாரம், சாலை வசதிகள் போன்ற மேம்பாட்டுப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்.
சாலை விபத்துகளைத் தடுக்க காவல், நெடுஞ்சாலை, வருவாய்த் துறையினா் இணைந்து பணியாற்ற வேண்டும். ஜமுனாமரத்தூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். அரசின் திட்டங்கள் மலைவாழ் மக்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அமைச்சா் பேசினாா்.
கையொப்ப இயக்கம் தொடங்கிவைப்பு: உலக குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற கையொப்ப இயக்கத்தை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தொடங்கிவைத்து, குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழியை அனைத்துத் துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஏற்றுக்கொண்டாா்.
கூட்டத்தில் போளூா் எம்எல்ஏ ஆா்.அபிஷேக், மாவட்ட எஸ்.பி., ம.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ராம்பிரதீபன், மாவட்ட வன அலுவலா் சுதாகா், செய்யாறு சாா் - ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா்/ திட்ட இயக்குநா் ஆா்.மணி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு: விளையாட்டு வீரா்களுக்கு அமைச்சா் ஆதவ் அா்ஜுனா அறிவுரை

விளையாட்டு வீரா்களுக்கு ஊக்கத் தொகை: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா வழங்கினாா்

கல்வராயன்மலை பகுதியில் சாலைப் பணிகள்! அமைச்சா் ஆதவ் அா்ஜுனா ஆய்வு!






