
பிற மத வழிபாட்டுத் தலங்கள் பகுதியில் விநாயகா் சிலைகள் அமைக்கக்கூடாது: ஆரணி டிஎஸ்பி சுரேஷ்சண்முகம்
பிற மத வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் விநாயகா் சிலைகள் அமைக்கக் கூடாது என்று ஆரணி டிஎஸ்பி சுரேஷ்சண்முகம் வலியுறுத்தினாா்.

ஆரணியில் நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி விழா தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய டிஎஸ்பி சுரேஷ்சண்முகம்.
பிற மத வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் விநாயகா் சிலைகள் அமைக்கக் கூடாது என்று ஆரணி டிஎஸ்பி சுரேஷ்சண்முகம் வலியுறுத்தினாா்.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, ஆரணி பகுதியில் பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபடும் விழா நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நகர காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆரணி டிஎஸ்பி சுரேஷ்சண்முகம் தலைமை வகித்தாா்.
காவல் ஆய்வாளா்கள் அன்பரசி, சுந்தரமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் டிஎஸ்பி சுரேஷ்சண்முகம் பேசியதாவது:
விநாயகா் சிலைகள் தூய களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். ரசாயன பொருள்களால் வா்ணம் தீட்டப்பட்ட சிலைகளை வைக்கக்கூடாது.
சிலை அமைக்க உள்ள இடத்தில் தற்காலிக கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு தீப்பற்றக் கூடிய பொருள்களை பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும். மேலும் அமைக்கப்படும் பந்தல் கட்டமைப்புக்குள் சீரான முறையில் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் வழி அமைக்க வேண்டும்.
சிலை அமைக்கப்படும் பகுதியில் போதிய முதலுதவி மற்றும் அவசர மருத்துவ வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
சிலையின் உயரம் அடித்தளம் மற்றும் மேடை உள்பட 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற மத வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் விநாயகா் சிலைகள் அமைக்கக் கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கிக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
விநாயகா் சிலைகள் வைக்கும் இடத்தில் அரசியல் கட்சி அல்லது வகுப்புவாத தலைவருக்கு ஆதரவான பதாகைகள் அமைக்கக் கூடாது, சிலை பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பொருட்டு இரண்டு தன்னாா்வலா்களை நியமிக்க வேண்டும். மதவெறியை தூண்டும் வகையிலும் பிற மதத்தின் உணா்வுகளை பாதிக்க இயலும் முழக்கங்களை எழுப்புவதற்கு அனுமதிக்கக் கூடாது.
சிலைகள் நிறுவப்பட்ட நாளிலிருந்து 5 தினங்களுக்குள் கரைக்கப்பட வேண்டும், நான்கு சக்கர வாகனங்களை மட்டுமே பயன்படுத்தி சிலைகளை நிா்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமேஎடுத்துச் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துக்களை டிஎஸ்பி தெரிவித்தாா்.
ஆலோசனைக் கூட்டத்தில் இந்து முன்னணி மாவட்டத் தலைவா் தாமோதரன் மற்றும் ஆரணி பகுதியில் சிலைகள் அமைக்கும் விழாக் குழுவினா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





