108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர், ஓட்டுநராகப் பணிபுரிய ஆள்கள் தேர்வு வேலூரில் மார்ச் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சுகாதார திட்டத்தின் கீழ், ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனம் மூலம் தமிழகத்தில் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 32 மாவட்டங்கிலும் மொத்தம் 914 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இதில் ஓட்டுநர்கள், அவசர கால மருத்துவ உதவியாளர்களாகப் பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்பு முகாம் வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை (மார்ச் 3) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் நியமிக்கப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி நியமன ஆணைகள் அதேநாளில் வழங்கப்படும்.
ஓட்டுநர் பணியிடத்துக்கு 10 -ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆண்கள் மட்டும் பங்கேற்கலாம். மேலும் அவர்கள் 23 வயது முதல் 35 வயதுக்கு உள்பட்டவராகவும், 162.5 செ.மீ. உயரத்துக்கு குறையாமலும், இலகரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்களாகவும், பேட்ஜ் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு பி.எஸ்ஸி., நர்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், டி-ஃபார்ம், டிஎம்எல்டி படித்த, அறிவியல் பிரிவில் பட்டம் பெற்ற இருபாலரும் பங்கேற்கலாம். மேலும், 20 வயது முதல் 30 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். நேர்காணலுக்கு அசல் கல்விச் சான்றுகளுடன் வர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.