ஆம்பூர் அருகே வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானை ஊருக்குள் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனர்.
ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஒற்றை யானை சுற்றித் திரிந்து வருகிறது. அதை ஊருக்குள் வராமல் தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து ஆம்பூர் வனச்சரக அலுவலர் கவிதா உத்தரவின் பேரில், வனவர் கருணாமூர்த்தி தலைமையில் வனக்காப்பாளர் சுரேஷ், வனக்காவலர் லட்சுமணன் மற்றும் வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளியை ஒட்டியும், ஊட்டல் தேவஸ்தானம் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியது: கடந்த ஆண்டு பருவமழை சரிவர பெய்யாததால், பெருங்கானாற்றில் நீர் குறைந்து காணப்படுகிறது. இதனால், பெருங்கானாற்றின் கரையில் பெரியதுருகம், தேன்கல் கானாறு, சாரங்கல் ஊட்டல் ஆகிய பகுதிகளில் முகாமிட்டு இருந்த யானைகள், மான்கள் தண்ணீர் தேடி காடுகளை விட்டு வெளியே வரத் தொடங்கியுள்ளன.
பெருங்கானாற்று பகுதியில் சுற்றித் திரிந்த ஒற்றை ஆண் யானை ஜம்பூட்டல் பகுதியில் கடந்த சில நாள்களாக திரிந்து வருகிறது. அதை ஊருக்குள் வராமல் தடுப்பதற்காக வனப்பகுதியில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வருகிறோம்.
ஜம்பூட்டல் வனப்பகுதியில் ஒற்றை யானை சுற்றித் திரிவதால் அங்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் அறிவுறுத்தியுள்ளோம். மேலும், இப்பகுதியில் முகாமிட்டு யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








