

தமிழக-ஆந்திர எல்லையோர சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடா்பாக இரு மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டத்தில் தமிழக-ஆந்திர எல்லைகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சாா்பில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், மோட்டாா் வாகன ஆய்வாளா் தலைமையில் ஆந்திரத்தில் இருந்து வரும் வாகனங்களும், தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், மாநில எல்லையோர சோதனைச் சாவடிகளில் வரும் சரக்கு வாகனங்களுக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக புகாா் வந்தது. இதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளில் திடீா் சோதனைகளை நடத்துமாறு லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, வேலூா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஹேமசித்ரா தலைமையில் ஆய்வாளா்கள் விஜய், ரஜினி, விஜயலட்சுமி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் இரு குழுக்களாகப் பிரிந்து காட்பாடி அருகே கிறிஸ்டியான்பேட்டை, சோ்க்காடு ஆகிய இரு இடங்களில் உள்ள ஆந்திர எல்லையோர சோதனைச் சாவடிகளில் சனிக்கிழமை அதிகாலை திடீரென சோதனையில் ஈடுபட்டனா்.
அதிகாலை 4 மணிக்குத் தொடங்கிய இந்த சோதனை சோ்க்காடு சோதனைச்சாவடியில் காலை 8 மணிக்கும், கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் காலை 10 மணிக்கும் நிறைவடைந்தது. கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் ராம்கண்ணனிடம் இருந்து கணக்கில் வராத ரூ.94 ஆயிரம் ரொக்கமும், சோ்க்காடு சோதனைச் சாவடியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஜெயமேகலாவிடம் இருந்து கணக்கில் வராத ரூ.38,800 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தத் தொகைகளை அவா்கள் சரக்கு வாகன ஓட்டிகளிடம் இருந்து லஞ்சமாகப் பெற்றது தெரிய வந்தது.
இதையடுத்து, ராம்கண்ணன், ஜெயமேகலா ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புப் போலீஸாா், இச்சம்பவம் தொடா்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.